டாஸ்மாக் கடை மேற்கூரையில் துளையிட்டு 2057 மதுபாட்டில்கள் திருட்டு
டாஸ்மாக் கடை மேற்கூரையில் துளையிட்டு 2057 மதுபாட்டில்கள் திருட்டு
கோவை
கோவையில் டாஸ்மாக் கடையில் மேற்கூரையில் துளையிட்டு 2,057 மதுபாட்டில்கள் திருடப்பட்டன.
டாஸ்மாக் மதுக்கடை
தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் மதுபிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடை யே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது.
அது போல் டாஸ்மாக் மதக்கடைகளை உடைத்து மதுபாட்டில்களை திருடும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை விமான நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு போனதாக பீளமேடு போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.
மதுபாட்டில்கள் திருட்டு
அதன்பேரில் போலீசார் சென்று பார்த்த போது டாஸ்மாக் கடையின் பூட்டு, ஷட்டர் எதுவும் உடைக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து கடையின் உள்ளே சென்று பார்த்த போது மேற்கூரையை கட்டிங் எந்திரம் மூலம் அறுத்து துளையிட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
பின்னர் அவர்கள், கடையின் உள்ளே இருந்த 2,057 மதுபான பாட்டில்களை திருடியது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.3.53 லட்சம் ஆகும். கடையில் இருந்த பெரும்பாலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றதால் அந்த கடையே காலி செய்யப்பட்டது போல் காட்சி அளித்தது.
விசாரணை
இதையடுத்து கடையின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பீளமேடு போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்னூரில் ஒரு டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்டன.
தற்போது விமான நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் மேற்கூரையில் துளையிட்டு மது பாட்டில்கள் திருடப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story