அரசு ஆஸ்பத்திரியில் சிடி ஸ்கேன் இருந்தும் மருத்துவ அறிக்கை தர டாக்டர் இல்லை கொரோனா நோயாளிகள் அவதி


அரசு ஆஸ்பத்திரியில் சிடி ஸ்கேன் இருந்தும் மருத்துவ அறிக்கை தர டாக்டர் இல்லை கொரோனா நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 29 May 2021 12:18 AM IST (Updated: 29 May 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் இருந்தும் மருத்துவ அறிக்கை தர டாக்டர் இல்லாததால் கொரோனா நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

பொள்ளாச்சி

அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் இருந்தும் மருத்துவ அறிக்கை தர டாக்டர் இல்லாததால் கொரோனா நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

சி.டி.ஸ்கேன்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு புதிதாக ரூ.1 கோடியில் நவீன வசதிகளுடன் சி.டி.ஸ்கேன் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் துல்லியமாக நோயின் தன்மையை கண்டறிய முடியும். 

கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள சி.டி. ஸ்கேன் எடுக்கப்படுகிறது.

தற்போது கொரோனா நோயாளிகளுக்கு நோயின் தன்மை குறித்து அறிந்து கொள்ள சி.டி.ஸ்கேன் முக்கியமாக இருக்கிறது. ஆனால் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ அறிக்கை கொடுக்க டாக்டர் இல்லாததால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.  

இதன் காரணமாக இங்கு ஸ்கேன் எடுத்தாலும், அறிக்கை அளிக்க டாக்டர் இல்லாததால் மருத்துவ அறிக்கை பெற தனியார் ஸ்கேன் மையங்களை தேடிச்செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

தனியார் மையம் 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கும்போது நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளின் பாதிப்பு தன்மை குறித்து தெரிந்து, அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

வழக்கமாக தினமும் குறைந்தபட்சம் 5 பேருக்கு தான் சி.டி. ஸ்கேன் எடுக்கப்படும். தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் ஆஸ்பத்திரியில் தினமும் 100 முதல் 150 பேருக்கு ஸ்கேன் எடுக்கப்படுகிறது.

 அரசு ஆஸ்பத்திரியில் இந்த ஸ்கேன் எடுக்க ரூ.500 தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே தனியாரில் ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய உள்ளது. 

டாக்டரை நியமிக்க வேண்டும் 

மேலும் அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் மருத்துவ அறிக்கை கொடுக்க டாக்டர் இல்லை. இதனால் இங்கு ஸ்கேன் எடுத்துவிட்டு அறிக்கை பெற தனியார் மையங்களுக்கு செல்வதால் அங்கு அந்த அறிக்கைக்காக ரூ.1500 வரை வசூலிக்கிறார்கள். 

இதனால் ஏழை-எளிய மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் பிரிவில் ஒரு டாக்டரை நியமிக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story