நெல்லை மாவட்டத்தில் கோடை காலத்தில் வெளுத்து வாங்கிய மழை 3 மடங்கு அதிகம் பெய்தது


நெல்லை மாவட்டத்தில்  கோடை காலத்தில் வெளுத்து வாங்கிய மழை   3 மடங்கு அதிகம் பெய்தது
x
தினத்தந்தி 29 May 2021 12:23 AM IST (Updated: 29 May 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கோடை காலத்தில் 3 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கோடை காலத்தில் 3 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது. 

கோடை மழை

நெல்லை மாவட்டத்தில் மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும். ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின்போது வெயில் அடிப்பதற்கு பதிலாக மழை பெய்து இதமான காலநிலை நிலவியது.

கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை நெல்லை மாவட்டத்தில் மட்டும் 977 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 122 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. கோடை காலத்தில் இதுபோல் கடந்த 20 ஆண்டுகளில் அதிகபட்சமாக தற்போதுதான் மழை பெய்துள்ளது.

3.21 மடங்கு அதிகம்

பாபநாசம் அணைப்பகுதியில் மட்டும் இந்த மாதம் கடந்த 28 நாட்களில் மொத்தம் 302 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ராதாபுரம் கடற்கரை பகுதியில் 204 மில்லி மீட்டரும், அம்பையில் 117 மில்லி மீட்டரும் பெய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மே மாதம் இயல்பான மழை அளவு சராசரி 38 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் சராசரியாக 122 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது 3.21 மடங்கு அதிகம் ஆகும்.

அணைகள்

இதுதவிர அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டியதால் நீர்நிலைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 132.20 அடியாக உயர்ந்துள்ளது. அணை நிரம்ப 10 அடி மட்டுமே பாக்கி உள்ளது.

இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 149.47 அடியை எட்டி நிரம்பும் தருவாயில் உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து 90 அடியாக உள்ளது.

தண்ணீர் திறக்க கோரிக்கை

கோடை காலத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்காமல் குடிநீருக்கு மட்டுமே இதுவரை தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு மே மாதமும் அணைகளில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கோடை காலத்தில் நடப்பாண்டில் அதிக மழை பெய்து, அணைகளில் நீர் இருப்பு அதிகமாக இருப்பதால் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story