கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி


கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி
x
தினத்தந்தி 29 May 2021 12:34 AM IST (Updated: 29 May 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே விளையாடியபோது கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

ஜெயங்கொண்டம்:

பாட்டி வீட்டிற்கு சென்றனர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த பொன்பரப்பி அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி வெண்ணிலா. இந்த தம்பதிக்கு ராகவன்(வயது 7) உள்பட 2 மகன்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திடீர்குப்பம் கிராமத்தில் உள்ள ராகவனின் பாட்டி வீட்டிற்கு, ராஜ், வெண்ணிலா ஆகியோர் மகன்களுடன் சென்று தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இரவு சுமார் 7 மணி அளவில் அப்பகுதியில் மழை பெய்துள்ளது. அதன் காரணமாக மின்சாரம் தடைபட்டுள்ளது.
வீடு திரும்பவில்லை
அப்போது தனது பாட்டி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ராகவன், பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவனை பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ராகவனின் பாட்டி வீட்டின் அருகே பவுனம்மாள் என்பவரின் வீட்டின் பின்புறம் உள்ள தரைக்கிணற்றில் அவன் தவறி விழுந்திருப்பானோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முனையில் அரிவாள் கட்டப்பட்ட நீண்ட கம்பை(வாங்குகழி) கிணற்றுக்குள் விட்டு பார்த்தபோது சிறுவனின் சட்டை வந்துள்ளது.
பிணமாக மீட்பு
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கிணற்றுக்குள் இறங்கி, தண்ணீருக்குள் இருந்து ராகவனை பிணமாக மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராகவனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story