கருப்பு பூஞ்சைக்கு மருந்து விற்பதாக ஆன்லைனில் மோசடி; பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் எச்சரிக்கை
கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து விற்பதாக ஆன்லைன் மோசடி நடப்பதால், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:
கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து விற்பதாக ஆன்லைன் மோசடி நடப்பதால், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கருப்பு பூஞ்சைக்கு மருந்து
கொரோனா வைரஸ் எனும் பெயரை கேட்டாலே, பலருக்கு தொற்று வரும் முன்பே மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடும். அந்த அளவுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. பெரும்பாலானவர்கள் கொரோனா அதிர்ச்சியில் இருந்து இன்னும் முழுமையாக வெளியே வரவில்லை. அதற்குள் கருப்பு பூஞ்சை எனும் மற்றொரு நோய் பரவி வருகிறது. இது கொரோனாவில் இருந்து மீண்டவர்களை அதிகம் பாதிக்கிறது. ஏற்கனவே கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் வாங்குவதற்கு நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் காத்து கிடந்த காட்சிகள் அனைவரையும் கலங்க வைத்தது.
அதை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் மருந்து, ஆக்சிஜன் விற்றனர். இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய்க்கும் மருந்து விற்பதாக மோசடி நபர்கள் கைவரிசை காட்ட தொடங்கி இருக்கின்றனர்.
ஆன்லைனில் மோசடி
இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு விரைவாக நிவாரணம் தரும் மருந்து ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் போலி முகவரியுடன் விளம்பரம் செய்யப்படுகிறது. மேலும் செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்கள் வருகின்றன. அதில் மருந்து தேவைப்படுவோர், குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொள்ளும்படி குறிப்பிடப்பட்டு இருக்கும்.
அந்த எண்ணை தொடர்பு கொண்டால், மருந்துக்கான முழு தொகையை ஆன்லைனில் செலுத்தினால் பார்சலில் மருந்து அனுப்பி வைப்பதாக தெரிவிக்கின்றனர். அதை உண்மை என நம்பி பணத்தை அனுப்பினால், மருந்து வருவதில்லை. அதன்பின்னர் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பினால் பதிலும் வருவதில்லை.அதன்பின்னர் ஏமாற்றப்பட்ட மக்கள் போலீசில் புகார் அளிக்கின்றனர்.
அந்த வகையில் திண்டுக்கல் உள்பட மாநிலம் முழுவதும் மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வருகின்றன. எனவே, கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆன்லைனில் மருந்து விற்பதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம். நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்ளுங்கள் என்று திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story