காரைக்குடி,
காரைக்குடி அருகே செட்டிநாடு போலீஸ் சரகம் நேமத்தான்பட்டியை சேர்ந்தவர் சோலையம்மாள் (வயது 85). இவரது மகன் ராமு(50).இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டு வந்து உள்ளனர். உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நீண்ட நேரமாகியும் இவரது வீட்டில் இரவு விளக்கு எரியவில்லை. இதனால் சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டின் கதவை திறந்து பார்த்த போது இருவரும் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் செட்டிநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் பிணத்தை கைப்பற்றி காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய்-மகன் இருவரும் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.