கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி சாவு: ஆக்சிஜன் அகற்றியதால் உயிரிழப்பா? அதிகாரிகள் விசாரணை
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளி இறந்தார். அவர் ஆக்சிஜன் அகற்றியதால் உயிரிழந்தாரா என டாக்டர்கள், செவிலியர்களிடம் சென்னை மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கடலூர்,
சாவு
திட்டக்குடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 49), தொழிலாளி. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 5-ந்தேதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு, அவருக்கு ஆக்சிஜன் மூலம் செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி அவர் உயிரிழந்தார். அவருக்கு, அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் குழாயை டாக்டர் ஒருவர் பிடுங்கிச் சென்றதால் அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி கயல்விழி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
கண்டனம்
எனினும், அவருக்கு காலை உணவு வழங்கப்பட்ட போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருதய அடைப்பால் உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி மாவட்ட கலெக்டரும் நேரில் விசாரணை நடத்தினார்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்னையில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
விசாரணை
அதன்பேரில் தொழிலாளியின் சாவு குறித்து விசாரிக்க மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக கூடுதல் இயக்குனர்கள் சந்திரசேகரன், மாலதி பிரகாஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கடலூர் வந்தனர். பின்னர், விசாரணை நடத்துவதற்காக அவர்கள் கடலூர் சுற்றுலா மாளிகைக்கு சென்றனர். அங்கு கடந்த 5-ந்தேதி தேதி முதல் 20-ந் தேதி வரையில் ராஜாவுக்கு சிகிச்சை அளித்த, கண்காணித்த டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோரை விசாரணைக்காக அழைத்தனர்.
40 பேர் ஆஜர்
அதன்படி மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, கண்காணிப்பாளர் சாய்லீலா, நிலைய மருத்துவ அலுவலர் குமார் மற்றும் பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் சுமார் 40 பேர் விசாரணைக்காக ஆஜராகினர்.
இதேபோல் ராஜாவின் மனைவி கயல்விழியும் விசாரணைக்காக வரழைக்கப்பட்டார். அவர் தனது மகன், இறந்த ராஜாவின் அண்ணன் ராஜ்குமாருடன் வந்தார்.
விவரங்களை கேட்டனர்
இதையடுத்து விசாரணைக்குழுவினர் முதலில் கயல்விழியை விசாரணைக்காக அழைத்தனர். அவரிடம் சுமார் 1½ மணி நேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆஸ்பத்திரியில் நடைபெற்ற விவரங்கள் அனைத்தையும் கயல்விழியிடம் கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, டாக்டர்கள், செவிலியர்களிடமும் மாலை வரையில் விசாரணை நடத்தினர். இதற்காக அவர்கள் நீண்ட நேரம் சுற்றுலா மாளிகையில் உள்ள மரத்தடியில் காத்திருந்து விசாரணை முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story