ஈரோட்டில் ஊரடங்கு கட்டுப்பாட்டிலும் அதிகரிக்கும் வாகன போக்குவரத்து


ஈரோட்டில் ஊரடங்கு கட்டுப்பாட்டிலும் அதிகரிக்கும் வாகன போக்குவரத்து
x
தினத்தந்தி 28 May 2021 10:08 PM GMT (Updated: 28 May 2021 10:08 PM GMT)

ஊரடங்கு கட்டுப்பாட்டிலும் ஈரோட்டில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

ஈரோடு
ஊரடங்கு கட்டுப்பாட்டிலும் ஈரோட்டில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
ஊரடங்கு மீறல் 
ஈரோடு மாவட்டம் கொரோனா பரவலில் முக்கிய இடத்தில் உள்ளது. கொங்கு மண்டல மாவட்டங்களில் கொரோனா சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்ட மாவட்டமாகவும் இது உள்ளது.
 தாளவாடி மலையில் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் தினசரி பாதிப்பில் ஈரோடு மாநகரம் முன்னணியில் உள்ளது.
இவ்வாறு குக்கிராமம் முதல் மாநகர் பகுதிவரை கொரோனாவின் பரவல் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அதே நேரம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்து உள்ள தளர்வில்லா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறும் நிலையும் ஈரோடு மாவட்டத்தில் அதிகமாகவே இருக்கிறது.
வாகன போக்குவரத்து
கடந்த 4 நாட்களாக ஓரளவு கட்டுப்பாடுடன் மக்கள் இருப்பது போன்று தெரிந்தது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருந்தது. ஈரோடு மாநகர் பகுதிக்கு புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்தன. பகல் 11 மணியை கடந்தும் வாகனங்கள் அதிக அளவில் வந்து, சென்று கொண்டு இருந்தன.
காளை மாடு சிலை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதனால் சில நிமிடங்களிலேயே 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு கூடின.
சோதனை தீவிரம்
அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள், ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத நிலை அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. பின்னர் போலீசார் இன்னொரு வழிப்பாதை மூலம் அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
பன்னீர் செல்வம் பூங்கா, ரவுண்டானா, கலெக்டர் அலுவலகம், பழையபாளையம், சுவஸ்திக் கார்னர் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Next Story