ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்


ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
x
தினத்தந்தி 29 May 2021 3:39 AM IST (Updated: 29 May 2021 3:39 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

கடத்தூர்
ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். 
உபகரணங்கள்
ஈரோடு மாவட்டம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் ஆலம் பவுண்டேசன் சார்பில் ஆஸ்பத்திரிக்கு தேவையான கட்டில், மெத்தை, சக்கர நாற்காலி, ஆக்சிபல்ஸ் மீட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உபகரணங்களை மருத்துவ அலுவலரிடம் வழங்கினார். தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். 
பற்றாக்குறை இல்லை
அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கூடுதலாக 350 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 300 படுக்கைகள் 10 நாட்களுக்குள்  அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றது.   அதேபோன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக ஆக்சிஜன்  படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. 
3500 படுக்கைகள்
கோபி, அந்தியூர், பவானி, சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிகளில் 100 முதல் 200 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளன. 
அதுமட்டுமன்றி ஈரோடு மாவட்டம் முழுவதும் கொரோனா ஆரம்ப கட்ட அறிகுறி உள்ளவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் 3,500 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களும் தங்களுக்கு கொரோனாஅறிகுறி இருந்தால் தாமாக சிகிச்சை பெற முன்வரவேண்டும். சிகிச்சை முடியும் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது.
கருப்பு பூஞ்சை
ஈரோடு மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக 10 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சி.கதிரவன், தாசில்தார் வெங்கடேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story