முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும்
சேலம்:
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சருக்கு மனு
சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மண்டல தலைவர் ரமேஷ், மண்டல செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் முனிரத்தினம் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் அனைவரும் முடி திருத்தும் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் வீடு, கடை வாடகை மற்றும் மின் கட்டணத்தை செலுத்த முடியாத சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
நிவாரணத்தொகை
அதேசமயம் அன்றாட சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற்ற உறுப்பினர்கள், பதிவு புதுப்பிக்காத உறுப்பினர்கள் மற்றும் பதிவு செய்யாத உறுப்பினர்கள் அனைவருக்கும் நிவாரணத்தொகையை வழங்க வேண்டும். அவ்வாறு நிவாரணத்தொகை அறிவித்தால் மட்டுமே எங்கள் சமுதாய மக்கள் பசி, பட்டினியில் இருந்து மீளமுடியும். எங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும்.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஊரடங்கில் வாழ்வாதாரம் பாதித்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி பல மாவட்டங்களில் தொழில் செய்ய முடியாத காரணத்தால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வும் நடந்தது. இந்த ஊரடங்கு நேரத்திலும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் முடிதிருத்தும் தொழிலாளர்களான எங்கள் குடும்பத்தையும் நீங்கள் காப்பாற்ற வழிவகை செய்ய வேண்டும்.
பாதுகாப்பு வழிமுறைகள்
எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முடிதிருத்தும் தொழிலுக்கு நேர அவகாசம் கொடுக்க வேண்டும். அதாவது, பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை தொழில் செய்ய அனுமதிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். அரசு அறிவிக்கிற பாதுகாப்பு வழிமுறைகளை சிறப்பாக கடைபிடித்து தொழில் செய்வோம் என தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story