முழு ஊரடங்கால் கடைகள் அடைப்பு சேலத்தில் மாம்பழ வியாபாரம் முடங்கியது விவசாயிகள் கவலை
சேலத்தில் மாம்பழ வியாபாரம் முடங்கியது
சேலம்:
முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டதால் சேலத்தில் மாம்பழ வியாபாரம் முடங்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மாம்பழம்
சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது மாம்பழம் தான். சேலம் மாம்பழம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் பிரபலமானதாகும். அந்தளவுக்கு மாம்பழத்தின் சுவை இருக்கும். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சேலத்தில் மாம்பழ சீசன் நடப்பது வழக்கம்.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் உச்சம் அடைந்துள்ளது. சேலம் சின்ன கடைவீதியில் மார்க்கெட்டிற்கு சங்ககிரி, ஆத்தூர், வனவாசி, மேச்சேரி, நங்கவள்ளி தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
விவசாயிகள் கவலை
குறிப்பாக சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம்பசந்த், குண்டு, நடுசாலை, பங்கனப்பள்ளி, செந்தூரா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுக்கு அதிக அளவில் விற்பனைக்கு வரும். இதனை சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வாங்கி செல்வார்கள்.
அதேசமயம் சேலத்தில் வசிக்கும் பொதுமக்கள் மாம்பழங்களை அதிகளவில் வாங்கி வெளியூர்களில் வசிக்கும் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சேலம் மாநகரில் மாம்பழ வியாபார கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மா பயிரிட்ட விவசாயிகள் மாம்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் பரிதவித்து வருகிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மரத்திலேயே மாம்பழங்களை பறிக்காமல் விவசாயிகள் விடுகிற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாம்பழங்கள் மரங்களிலேயே அழுகி வீணாகி வருகிறது. இதனை பார்த்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோரிக்கை
பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு மாம்பழங்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் மாம்பழ வியாபாரம் அடியோடு முடங்கி போயுள்ளது. கடந்த ஆண்டும் இதேபோல் கொரோனாவால் மாம்பழ வியாபாரம் பாதித்த நிலையில் இந்த ஆண்டும் மாம்பழம் வியாபாரம் முடங்கி உள்ளதால் மா விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
அதேசமயம் மா விவசாயிகளுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரிய இழப்பீடு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story