கடல் போல் காட்சியளிக்கும் வைகை அணை
67 அடியை எட்டிய நிலையில் வைகை அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தீவிர ஏற்பாடு நடந்து வருகிறது.
ஆண்டிப்பட்டி:
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி ஆகும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஜூன் மாதம் முதல் தற்போது வரை, வைகை அணை நீர்மட்டம் சராசரியாக 60 அடியாக நீடித்து வருகிறது.
அணையில் இருந்து முதல், 2-ம் போக சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், அவ்வப்போது பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தது. அதாவது ஓராண்டு முழுவதும் வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியிலேயே நீடித்திருப்பது இதுவே முதல்முறை ஆகும்.
67 அடி தண்ணீர்
இந்நிலையில் தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து, கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் எதிரொலியாக, வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 67 அடியை எட்டியுள்ளது.
நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையின் நீர்த்தேக்க பகுதி கடல்போல் காட்சியளிக்கிறது.
தண்ணீர் திறக்க ஏற்பாடு
இதற்கிடையே வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களுக்கு பாசனத்துக்காக வருகிற 4-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாட்டில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி, வைகை அணையின் நீர்மட்டம் 66.67 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 763 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
--------
Related Tags :
Next Story