பொதுமக்களுக்கு உதவும் கரங்களாக போலீசார் செயல்பட வேண்டும்
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கிற பொது மக்களுக்கு உதவும் கரங்களாக போலீசார் செயல்பட வேண்டும் என்று திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தெரிவித்தார்.
தேனி:
டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.
பெரியகுளம், எண்டப்புளி, லட்சுமிபுரம், அன்னஞ்சி, முத்துத்தேவன்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது அந்தந்த பகுதிகளுக்கான கிராம நிர்வாக அலுவலர், ஊர் முக்கிய பிரமுகர்கள், கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட போலீசார் ஆகியோரை சந்தித்து தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்து, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:-
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து மக்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது. வெளி நபர்கள் யாரையும் உள்ளே வர அனுமதிக்கக்கூடாது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லக்கூடாது.
உதவும் கரங்கள்
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து பயப்பட வேண்டாம்.
கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள போலீசார், அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உதவும் கரங்களாக செயல்பட வேண்டும்.
மக்களுக்கு தேவையான காய்கறி, மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களின் உதவிக்கு எந்த நேரமும் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
---------
Related Tags :
Next Story