ஊரடங்கால் வேளாங்கண்ணியில் மூடப்பட்டுள்ள விடுதிகள்- கடைகள்: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வியாபாரிகள்-தொழிலாளர்கள் - தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை


ஊரடங்கால் வேளாங்கண்ணியில் மூடப்பட்டுள்ள விடுதிகள்- கடைகள்: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வியாபாரிகள்-தொழிலாளர்கள் - தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 29 May 2021 6:30 PM IST (Updated: 29 May 2021 6:30 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கால் வேளாங்கண்ணியில் விடுதிகள், கடைகள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து வியாபாரிகள், தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்து உள்ளது. வங்க கடலோரம் அமைந்துள்ள இந்த பேராலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு, சாம்பல் புதன், குருத்தோலை ஞாயிறு, புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை, கிறிஸ்துமஸ் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும்.

இதில் முக்கிய நிகழ்வான மாதாவின் பிறந்த நாளான ஆண்டு பெருவிழாஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் 2-வது அலை தமிழகத்தில் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மத சடங்குகள், கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக வேளாங்கண்ணி மாதா பேராலயம் மூடப்பட்டு உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் வேளாங்கண்ணியில் அதிக அளவில் கூட்டம் காணப்படும். அப்போது வங்கக்கடலில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து செல்வார்கள். தற்போது ஊரடங்கால் கடற்கரைப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி கிடக்கிறது. சர்ச் சாலை, ஆரிய நாட்டுத்தெரு, கடற்கரை சாலை, கடற்கரை, கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன.

வேளாங்கண்ணியில் 500-க்கும் மேற்பட்ட விடுதிகள், 50-க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய ஓட்டல்கள், 100-க்கும் மேற்பட்ட டீக்கடைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட அழகு சாதன பொருட்கள் விற்பனை கடைகள், 25-க்கும் மேற்பட்ட பொரி, பட்டாணி, நிலக்கடலை விற்பனை செய்யும் கடைகள். மெழுகுவர்த்தி கடைகள், 50-க்கும் மேற்பட்ட முடி எடுக்கும் கடைகள் உள்ளன.

தற்போது இவை அனைத்தும் மூடப்பட்டு கிடப்பதால் வியாபாரிகள், தொழிலாளர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். மின் கட்டணம் செலுத்துவதற்கு கூட வருமானம் இன்றி தவித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமும் வேளாங்கண்ணிக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 5 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். ஊரடங்கினால் அவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். அன்றாட வருமானத்திற்காக கடற்கரை பகுதிகளில் அவித்த நிலக்கடலை, சுண்டல் மற்றும் வெள்ளரிக்காய், ஜூஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் தள்ளு வண்டியில் வைத்து வியாபாரம் செய்த வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல கார், ஆட்டோ, வேன் ஓட்டுனர்களும் சுற்றுலா பயணிகள் வராததால் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு மாத தவணை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கார், வேன், ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் கூறும்போது, வேளாங்கண்ணி ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். இங்கு 100-க்கும் மேற்பட்ட கார், வேன், ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதில் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் அழைத்துச் செல்வதற்கு வாகனங்களை பயன்படுத்தி வந்தோம். தற்போது வேளாங்கண்ணி பேராலயம் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருவது இல்லை. இதனால் வாகன உரிமையாளர்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு கார், வேன் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றார்.

ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாஸ்கர் கூறும்போது,

வேளாங்கண்ணியில் 50-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வேளாங்கண்ணி பேராலயம் அவ்வப்போது மூடப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை இல்லை. இங்கு உள்ள ஓட்டல்களில் வேலை பார்க்கும் ஊழியர்களும் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஓட்டலுக்கு மின் கட்டணம் செலுத்தக்கூட முடியவில்லை. அரசு எங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

சாலையோரம் இட்லி கடை நடத்தும் லில்லி புஷ்பம் கூறும்போது, நான் பேராலயத்தின் முன்புறம் உள்ள சாலையோரத்தில் 25 ஆண்டுகளாக இட்லி கடை நடத்தி வருகிறேன். என்னைப்போல 15-க்கும் மேற்பட்டோர் அங்கு இட்லி கடை நடத்தி வருகிறார்கள். எங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.600-ல் இருந்து ரூ.700 வரை வருமானம் கிடைத்து வந்தது. ஊரடங்கால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வராததால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வருமானத்தை வைத்துதான் மூன்று மகள்களை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்தி வருகிறேன். இந்த வருமானத்தில் தான் அவர்களுக்கு படிப்பு செலவையும் கவனித்து வந்தேன். தற்போது வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Next Story