குத்தாலம் அருகே விக்கிரமன் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணியை ஒரு தரப்பு மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு
குத்தாலம் அருகே விக்கிரமன் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணியை ஒரு தரப்பு மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதின்பேரில்் கலைந்து சென்றனர்.
குத்தாலம்,
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரி ஊராட்சி ரெங்கநாதபுரம் கிராமத்தில் விக்ரமன் ஆற்றின் குறுக்கே ஏற்கனவே பாலம் இருக்கும் நிலையில், பாலத்தின் அருகே 500 மீட்டர் தொலைவில் புதிய பாலம் கட்ட கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதற்காக நேற்று பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது. இதற்கு ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1997-ம் ஆண்டு ஏற்கனவே உள்ள பாலத்தில் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதன்பின்னர் 18 பஞ்சாயத்து ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தி அந்த பாலத்தில் இரு தரப்பினரும் இறந்தவரின் உடலை கொண்டு ெசல்லலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இதுவரை ஏற்கனவே உள்ள பாலத்தின் வழியாக இரு தரப்பினரும் இறந்தவர்களின் உடலை கொண்டு சென்று வந்தனர்.
இந்தநிலையில் தற்போது ஒரு தரப்பு மக்களுக்காக மாற்று பாலம் கட்டினால் மீண்டும் இரு தரப்பினர் இடையே பிரிவினை உண்டாகும். என கூறி புதிய பாலம் கட்டும் பணியை அரசு கைவிட வேண்டும் என ஒரு தரப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இதுகுறித்து உதவி கலெக்டர் ்தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்தார். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதைதொடர்ந்து பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story