கொரோனா பலியோடு இயற்கை மரணமும் அதிகரிப்பு உடலை எரியூட்ட முடியாததால் சவப்பெட்டி விற்பனை விறுவிறுப்பு


கொரோனா பலியோடு இயற்கை மரணமும் அதிகரிப்பு உடலை எரியூட்ட முடியாததால் சவப்பெட்டி விற்பனை விறுவிறுப்பு
x
தினத்தந்தி 29 May 2021 8:23 PM IST (Updated: 29 May 2021 8:25 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பலியோடு இயற்கை மரணமும் அதிகரித்துள்ளதால் உடலை எரியூட்ட முடியவில்லை. இதனால் சவப்பெட்டி விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.


திண்டுக்கல்:
உலகில் மனிதன் பிறந்ததும், அவனின் மரண தேதியும் குறிக்கப்படுவதாக பெரியவர்கள் சொல்வார்கள். ஏனெனில் அனைவரையும் மரணம் தழுவி கொள்கிறது. ஆனால், பூவுலக வாழ்க்கையை விட்டுவிட்டு இறப்பதற்கு யாரும் விரும்புவது இல்லை.

எனினும், மரணம் வந்தே தீரும் என்பதை அனைவரும் அறிவோம். அதேநேரம் மரணம் எப்படி இருக்கக் கூடாது என்று ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் இருக்கும். அதன்படி கோழையிடம் குத்துவாங்கி உயிரிழக்க வீரன் விரும்புவது இல்லை. அதேபோல் கோர விபத்தில் துடிதுடித்து இறப்பது, நோய்வாய்ப்பட்டு நீண்டநாள் படுக்கையில் கிடந்து இறப்பது போன்ற கொடிய மரணத்தை யாரும் விரும்புவது இல்லை.
அதேநேரம் வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்தால் மரணத்தின் மீது மரியாதையும், விருப்பமும் வந்துவிடும் என்பார்கள். மனைவி, பிள்ளைகள், பேரக்குழந்தைகள், உறவினர்கள் மட்டுமின்றி ஊராரும் கண்ணீர் சிந்த இறுதி ஊர்வலம் நிகழ்ந்தால் அது வாழ்வில் அர்த்தம் இருந்ததாக கூறுவார்கள். அதையே அனைவரும் விரும்பினாலும், அது பாவ கணக்கை பொறுத்தது.

கொரோனா சாவு 
இதனால் சிலர் தூக்கத்திலேயே இறந்து விடவேண்டும் என்பார்கள். ஆயுள் வரை எப்படி வாழ்ந்தாலும், இறுதியில் மரணம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இது அனைவருக்கும் நிறைவேறுவது இல்லை. ஆனால், ஒரு சில மரணங்கள் எதிரிகளுக்கு கூட நிகழக்கூடாது என்று நினைக்கும் அளவுக்கு இருக்கும். அது இன்றைய காலகட்டத்தில் ஏற்படும் கொரோனா மரணமாக தான் இருக்கும்.
கண்களுக்கு தெரியாமல் உடலுக்குள் புகுந்து உள்உறுப்புகளை சிறிது, சிறிதாக கொன்று உயிரை குடிக்கும் கொடிய நோய் கொரோனா. மூச்சுக்காற்று நுரையீரலுக்குள் செல்ல முடியாமல், இதயம் துடிக்க முடியாமல், உடலை விட்டு பிரிய இயலாமல் உயிர் இழுத்து கொண்டிருப்பதை யாரால் தான் பார்க்க முடியும்.

மரணங்கள் அதிகரிப்பு 
அதுமட்டுமா? உயிர் பிரிந்த பின்னால் உறவினர்கள் கூட உடலை பார்க்க முடியாது. வாழ்ந்த நாட்களில் உயிருக்கு உயிராக இருந்த மனைவி, குழந்தைகள் கூட கொரோனாவால் இறந்தவரின் உடலை தொட்டு பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு 3 பிளாஸ்டிக் பைகளால் சுற்றப்படுகிறது. இத்தகைய கொரோனா மரணங்கள் தினமும் அதிகரிக்கின்றன.
இதில் திண்டுக்கல் மாவட்டமும் தப்பவில்லை. கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 165 பேர் கொரோனாவில் இறந்தனர். மேலும் பலர் கொரோனா தொற்று இருப்பதை தெரிந்து கொள்ளாமலேயே இறந்து விடுகின்றனர். இதற்கிடையே கொரோனாவை தவிர்த்து மாரடைப்பு, மூச்சுத்திணறல், வயது மூப்பால் உடல்நலம் குன்றுதல் உள்ளிட்டவற்றாலும் அதிகமாக மரணங்கள் ஏற்படுகின்றன.

சவப்பெட்டி 
பொதுவாக மரணமடைந்தவரின் உடல், உறவினர்கள் புடைசூழ மயானத்துக்கு எடுத்து சென்று அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா மரணம் ஏற்பட்டால் பெரும்பாலான உடல்கள் மாவட்டத்தில் உள்ள மின்மயானங்கள், எரிவாயு மயானங்களில் எரியூட்டப்படுகின்றன. இதற்காக மயானங்களில் உடல்களுடன் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒருசில உடல்கள் மட்டுமே தன்னார்வலர்கள் மூலம் அடக்கம் செய்யப்படுகின்றன. கொரோனா பலியால், இயற்கை மரணங்களில் இறப்பவர்களின் உடல்களை மின்மயானங்களில் எரிக்க முடியவில்லை. எனவே, சுடுகாடுகளில் அடக்கம் செய்யப்படுகிறது. அடக்கம் செய்யப்படும் உடல்களை சவப்பெட்டியில் வைத்து எடுத்து செல்வது வழக்கம்.
விற்பனை விறுவிறுப்பு 
அந்த வகையில் திண்டுக்கல்லை பொறுத்தவரை மேட்டுப்பட்டியில் சவப்பெட்டி தயாரித்து விற்பனை செய்யும் 5 கடைகள் உள்ளன. இங்கு திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் வந்து சவப்பெட்டிகளை வாங்கி செல்கின்றனர். கடந்த ஒரு மாதமாக இயற்கை மரணம் அதிகரிப்பால் சவப்பெட்டிகளின் விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது.
இதுகுறித்து மேட்டுப்பட்டியை சேர்ந்த சவப்பெட்டி கடைக்காரர் ஜெயபிரகாசம் கூறுகையில், கொரோனா காலத்துக்கு முன்பு விபத்துகளில் உயிரிழந்த நபர்களின் உடல்களை அடக்கம் செய்யவே அதிகமாக சவப்பெட்டிகள் விற்பனையாகும். ஆனால், தற்போது கொரோனா இறப்பு மற்றும் இயற்கை மரணங்கள் அதிகரித்து இருக்கின்றன. மின்மயானங்களில் உடல்களை எரியூட்டுவதற்கு பலமணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
விலை உயர்வு 
எனவே இயற்கையாக இறப்பவர்கள் மட்டுமின்றி ஒருசில கொரோனா நோயாளிகளின் உடல்களும் அடக்கம் செய்யப்படுகின்றன. இதனால் சவப்பெட்டி விற்பனை அதிகரித்து இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 600 பெட்டிகள் விற்றுள்ளன. அதேநேரம் ஊரடங்கால் மரக்கடைகள் அனைத்தும் மூடி இருப்பதால் சவப்பெட்டி தயாரிக்க மரப்பலகைகள் கிடைப்பதில்லை.
இதனால் மரப்பலகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு சவப்பெட்டிகளின் விலை உயர்ந்து விட்டது. முன்பு ரூ.900-க்கு விற்ற சாதாரண சவப்பெட்டியின் விலை ரூ.2,500 ஆக உயர்ந்து விட்டது. இதுதவிர ரூ.12 ஆயிரம், ரூ.24 ஆயிரம், ரூ.40 ஆயிரம் விலையிலும் சவப்பெட்டி விற்கப்படுகிறது. மரக்கடைகள் திறப்பை இன்னும் தள்ளிப்போட்டால் சவப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும், என்றார்.

Next Story