மதுபாட்டில்கள் கொள்ளை
தாராபுரம் அருகே டாஸ்மாக் கடை ஷட்டரை கட்டிங் எந்திரத்ததால் துளையிட்டு 350 மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
தாராபுரம்
தாராபுரம் அருகே டாஸ்மாக் கடை ஷட்டரை கட்டிங் எந்திரத்ததால் துளையிட்டு 350 மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
டாஸ்மாக் கடை
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.
இதனால் ஊரடங்கு பிறப்பித்த நாள் முதல் தினமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதன்படி ரூ.120 விலையுள்ள குவாட்டர் மதுபாட்டில் ஒன்று ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொள்ளை
இந்த நிலையில் நேற்று அலங்கியதில் பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையின் ஷட்டர் துளையிடப்பட்டு இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அலங்கியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் அலங்கியம் போலீசார் மற்றும் மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், துணை சூப்பிரண்டு வின்சென்ட், இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் சம்பவம் நடந்த கடைக்கு விரைந்து சென்றனர். அப்போது டாஸ்மாக் கடையின் ஷட்டர் ஆள் நுழையும் அளவுக்கு கட்டிங் எந்திரத்தால் வெட்டி துளை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் டாஸ்மாக் கடையின் மதுபாட்டில்கள் எண்ணிக்கையை விற்பனையாளரை வரவழைத்து சரிபார்த்தனர். அப்போது 350 மதுபாட்டில்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமரா
இதையடுத்து கடையில் பொருத்த பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஆசாமிகளின் உருவம் பதிவாகி இருக்கலாம் என்று கண்கணிப்பு கேமராவை ஆய்வு செய்ய முயன்றனர். ஆனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் காணவில்லை. மர்ம ஆசாமிகள் அந்த கேமராவை எடுத்து சற்று தொலைவில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது. இதனால் அந்த கேமரா உடைந்து கிடந்தது. இதையடுத்து கை ரேகை நிபுணர்கள் வரழைக்கப்பட்டு அங்கு கிடந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடையின் ஷட்டரை கட்டிங் எந்திரம் மூலம் வெட்டி மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
------------
---
---------
டாஸ்மாக் கடையில் கட்டிங் எந்திரம் மூலம் ஷட்டர் வெட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
--------------
Related Tags :
Next Story