இயற்கை உரம் தயாரிக்கும் மையம்


இயற்கை உரம் தயாரிக்கும் மையம்
x
தினத்தந்தி 29 May 2021 8:40 PM IST (Updated: 29 May 2021 8:40 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே தின்னப்பட்டி சாளையூர் ஊராட்சியில் செயல்படாமல் உள்ள மண்புழு இயற்கை உர உற்பத்தியை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

தளி
உடுமலை அருகே தின்னப்பட்டி சாளையூர் ஊராட்சியில் செயல்படாமல் உள்ள மண்புழு இயற்கை உர உற்பத்தியை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இயற்கை உரங்கள்
வானம் பார்த்த பூமியை உயிர்ப்புத்தன்மை உடையதாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. கோடை காலத்தில் நிலத்தில் இடப்படுகின்ற வேப்பம் புண்ணாக்கு, மாட்டுச்சாணம், கோழி எச்சம், பட்டி அடைத்தல் முறையில் ஆடுகளின் புழுக்கை, வாத்துக்கோழியின் எச்சம், தழைச்சத்துக்கு சணப்பை போன்றவை மழைப்பொழிவுக்கு பின்பு பணியை தொடங்கி விடுகிறது.
 இதனால் நிலத்தில் மண்புழுக்கள் விவசாயத்திற்கு நன்மை செய்யும் பூச்சிகள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதையடுத்து  நிலத்தை வேப்பன் மற்றும் கருவேலான் மரத்தின் மூலம் செய்யப்பட்ட ஏர் கலப்பையை கொண்டு உழவு செய்வார் விவசாயி. இதனால் நிலமும் குளிர்ச்சியாவதுடன் விவசாயத்திற்கு எதிரான பூச்சியினங்கள் களைகள் இயற்கையாக கட்டுப்படுத்தப்படுகிறது.
மண்வளம்
அதன் பின்பு நிலத்தில் இடப்படுகின்ற ஒவ்வொரு விதையும் திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்கிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போன்று பூச்சி தாக்குதலை எதிர்கொண்டு அதிக விளைச்சலை கொடுப்பதற்கு அது தயாராகி விடுகிறது. 
பயிர்களை பக்குவப்படுத்தி பராமரிப்பு செய்து அதில் எதிர்பார்த்த அளவு விளைச்சலை ஈட்டி விடுவார் விவசாயி. இது இயற்கையோடு ஒன்றிணைந்த விவசாயம் ஆகும். இதனால் உடலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றதுடன் இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு அதிகரித்து மழைப்பொழிவும் சீராக இருந்தது.
செயற்கையின் வருகையால் அழிவு
ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக விவசாயத்தில் விஞ்ஞானம் நுழைந்தது.  ஹை-பிரீட் விதைகள், ரசாயன உரங்கள், செயற்கை பூச்சிக்கொல்லிகள், உழவுக்கு எந்திரங்களின் வரவு முதலில் விவசாயிக்கு அதிகளவில் விளைச்சலை கொடுத்து இனிப்பை தந்தது.
பின்பு படிப்படியாக நிலத்தின் உயிர்ப்புத்தன்மை மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளை அழித்து வந்தலால் நிலமும் வெப்ப மாயமானது. இதன் காரணமாக உழவனின் நண்பனான மண்புழு மற்றும் நன்மை செய்யும் பூச்சிகள் அவற்றை உணவாகக் கொண்ட பறவையினங்கள் மண்ணில் இருந்து அடியோடு மறைந்தே விட்டது.
இதனால் நிலம் மலடாகி முழுமையாக கருத்தரிக்க முடியாத நிலையே தற்போது உள்ளது.எந்த விதையை நடவு செய்தாலும் அது முழுமையாக முளைப்பதில்லை. மீண்டும் அதில் புதிதாக விதைகளை நடவு செய்ய வேண்டிய நிலையே உள்ளது.மேலும் உயிர்ப்பு தன்மை இல்லாத வெப்பம் நிறைந்த நிலத்தில் விளைந்த பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்கிறது.
 அதுமட்டுமின்றி மழைப்பொழிவு குறைவு, கூலியாட்கள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, இடு பொருட்கள் விலைஉயர்வு, விற்பனை செய்வதில் உள்ள இடர்பாடுகள், விளை பொருட்களுக்கு உரியவிலை கிடைக்காதது, இடைத்தரகர்கள் ஆதிக்கம் என விவசாயம் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது.
இயற்கை மீட்கப்படுமா
இந்த சூழலில்தான் இயற்கை முறையில் விவசாயத்தை மீட்டு புத்துயிர் பெறச் செய்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் முதல் படியாக மண்புழு மற்றும் இயற்கை உரத்தை இட்டு நிலத்தை உயிர்ப்புதன்மை பெறச்செய்வதே நோக்கமாக இருந்தது. ஆனால் முறையான வழிகாட்டல் இல்லாதலால் அதில் ஒரு சில இளம் விவசாயிகள் மட்டுமே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் வீடுகளில் சேகரிக்கப்படுகின்ற காய்கறி, உணவு மற்றும் மக்கும் கழிவுகளைக் கொண்டு ஊரகவளர்ச்சித்துறை சார்பில் மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதற்காக ஊருக்கு ஒதுக்கு புறமான பகுதியில் குடிலும் அமைக்கப்பட்டது. அதில் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தின்னப்பட்டி சாளையூர் ஊராட்சியும் அடங்கும். ஆனால் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக அது முறையாக செயல்படாமல் இன்றுவரை மண்புழு இயற்கை உர உற்பத்தியும் நடைபெறாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது.
 இதனால் விவசாயமும் இயற்கை முறைக்கு மாறுவதும் தடை ஏற்பட்டுள்ளது. அத்துடன் திட்டம் தொடங்கப்பட்டதற்கான நோக்கமும் அதற்கான நிதியும் வீணாகி வருகிறது. எனவே தின்னப்பட்டி சாளையூர் ஊராட்சி உட்பட உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் செயல்படாமல் உள்ள மண்புழு இயற்கை உர உற்பத்தியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story