வாட்ஸ்அப் குழு


வாட்ஸ்அப் குழு
x
தினத்தந்தி 29 May 2021 9:19 PM IST (Updated: 29 May 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

காய்கறிகள் வீணாவதை தடுக்கும் விதமாக தினத்தந்தி செய்தி எதிரொலியாக மாவட்ட அளவில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அ டங்கிய வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

போடிப்பட்டி
 காய்கறிகள் வீணாவதை தடுக்கும் விதமாக தினத்தந்தி செய்தி எதிரொலியாக மாவட்ட அளவில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அ டங்கிய வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
விற்பனையில் சிக்கல்
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட தளர்வுகளற்ற ஊரடங்கால் காய்கறிகள் விற்பனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமளவு காய்கறிகள் தேங்கி, அழுகி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
அதேநேரத்தில் ஒரு பகுதியில் அதிக அளவில் விளைவிக்கப்படும் காய்கறிக்கு மற்றொரு பகுதியில் தேவை அதிகமாக இருக்கக்கூடும். எனவே காய்கறிகள் வரத்தை திட்டமிட்டு, தேவையை அறிந்து கொண்டு அதற்கேற்ப ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு காய்கறிகளை கொண்டு சென்று விற்பனை செய்ய உதவும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து வாட்ஸ்அப் குழு அமைக்க வேண்டும் என்று தினத்தந்தியில் கடந்த 27ந் தேதி செய்தி வெளியானது.
வாட்ஸ்அப் குழு
இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து டிமாண்ட் அண்ட் சப்ளை மேனேஜ்மென்ட் பார் கோவிட் சீசன்  என்ற வாட்ஸ்ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தங்கள் பகுதியில் உள்ள காய்கறிகளின் இருப்பு நிலவரம் மற்றும் தேவை குறித்து அதிகாரிகள் தினசரி பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும் காய்கறிகளை அதிக அளவில் அறுவடை செய்து இருப்பு வைத்துள்ள விவசாயிகளின் செல்போன் எண்களை வியாபாரிகளிடம் பகிர்ந்து நேரடியாக விளைநிலங்களுக்கே சென்று காய்கறிகளை கொள்முதல் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது
இந்த குழு ஆரம்பிக்கப்பட்டதால் விவசாயிகள் அறுவடை செய்யும் காய்கறிகளை முழுமையாக விற்பனை செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் விவசாயிகள் விளைபொருட்கள் வீணாகாமல் தடுப்பதில் பெருமளவு உதவிகரமாக இருக்கும். இந்த இக்கட்டான சூழலில் முழுமூச்சாக இதற்காக செயலாற்றுகிறோம். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தங்களிடமுள்ள காய்கறிகளின் இருப்பு விவரம் குறித்து அந்தந்த வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனருக்கு தெரிவிக்கலாம். 
அதிக பரப்பளவில் அறுவடை மேற்கொள்ளும் விவசாயிகள் முடிந்தவரை அறுவடைக்கு முந்தைய தினமே அதுகுறித்த தகவல்களை எங்களுக்குத் தெரிவித்தால் அதனை விற்பனை செய்வதற்கு பெருமளவு உதவ முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த குழு மாநில அளவில் விரிவாக்கப்பட்டால் கூடுதலான பலனைப்பெற முடியும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story