லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை திரும்ப பெறக்கோரி தஞ்சையில், ஆர்ப்பாட்டம்
லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை திரும்ப பெறக்கோரி தஞ்சையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சை விளார்சாலை பர்மாகாலனி இந்திராநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆகியவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுல்லாபுதீன் தலைமை தாங்கினார்.
மத்திய அரசின் பிரதிநிதியாக லட்சத்தீவிற்கு நியமிக்கப்பட்டுள்ள பிரபுகோடா படேல், சீர்திருத்தம் என்ற பெயரில் மக்களின் அன்றாட உணவான மாட்டிறைச்சியை தடை செய்வது, இதுநாள் வரை இல்லாத வகையில் தற்போது மதுக்கடைகளை திறப்பது, அங்கன்வாடி பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் உணவுகளில் மாமிசத்தை எடுத்து விடுவது, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது, இயற்கை எழில் கொஞ்சும் லட்சத்தீவில் யார் வேண்டுமானாலும் இடங்களை வாங்கி கொள்ளலாம் என்று கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக சட்டம் கொண்டு வருவது என மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருவதை கண்டித்தும், லட்சத்தீவின் நிர்வாக அதிகாரி பிரபு கோடா படேலை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகிகள் செந்தில்குமார், ஜாகீர்உசேன், அப்துல்நசீர், மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் வெ.ஜீவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் குருசாமி, நிர்வாகி கோஸ்கனி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சையத்முகமது, ஷேக்முகமது, சம்சுதீன், பஷீர்அகமது, முகமது இஸ்மாயில் மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Related Tags :
Next Story