நாகையில் பிரசவ வலியில் நடந்து வந்த கர்ப்பிணிக்கு உதவிய போலீஸ் ஏட்டு
நாகையில் பிரசவ வலியில் நடந்து வந்த கர்ப்பிணியை போலீஸ் ஏட்டு ஒருவர் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
நாகப்பட்டினம்,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவது. கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மருந்தகம், பால் ஆகிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் பஸ், கார், ஆட்டோ ஆகியவை ஓடவில்லை. நாகையில் முக்கிய சாலைகளில் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகூரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பிரசவத்துக்காக அவரை நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது உறவினர்கள், சாலையில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்கிறதா? என்று பார்த்துள்ளனர். ஆனால் ஊரடங்கு காரணமாக வாகனங்கள் ஒன்றும் ஓடவில்லை. பிரசவ வலி அதிகமானதால் கர்ப்பிணி தனது உறவினர்கள் 2 பேருடன் நடந்தே நாகை அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நாகை ஏழை பிள்ளையார் கோவில் சோதனை சாவடி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு ஜெயபால் இதை பார்த்து, கர்ப்பிணியிடம் ஏன் நடந்து வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் பிரசவ வலி அதிகமானதாலும், மருத்துவமனைக்கு செல்ல வாகனங்கள் கிடைக்காததாலும் நடந்தே வருவதாக தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து அந்த பகுதியில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை அங்கு வர வழைத்து அதில் கர்ப்பிணியை ஏற்றி தன்னிடம் இருந்த பணத்தை ஆட்டோவுக்கு ஜெயபால் கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கர்ப்பிணிக்கு உதவி செய்த போலீஸ் ஏட்டு ஜெயபாலுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story