மளிகை பொருட்களும் நடமாடும் வாகனத்தில் விற்பனை


மளிகை பொருட்களும் நடமாடும் வாகனத்தில் விற்பனை
x
தினத்தந்தி 29 May 2021 10:53 PM IST (Updated: 29 May 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் போல மளிகை பொருட்களும் நடமாடும் வாகனத்தில் விற்பனை செய்யப்படும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் போல மளிகை பொருட்களும் நடமாடும் வாகனத்தில் விற்பனை செய்யப்படும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள், தங்கு தடையின்றி குடியிருப்பு பகுதிகளுக்கே நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்தல் தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து வர்த்தக சங்க பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:- தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. 
இந்த ஊரடங்கு நடைமுறை வருகிற 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வார கால முழு ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அனைத்தும் தோட்டக்கலைத் துறை ஒருங்கிணைப்பில் நடமாடும் விற்பனை வாகனங் களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, குடியிருப்பு பகுதிகளிலேயே நேரடியாக விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜூன் 7-ந் தேதி வரை இந்த நடைமுறையே தொடர்ந்து பின்பற்றப்படும்.
மளிகை பொருட்கள்
மேலும், தற்போது மளிகை பொருட்களையும் நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலமாக குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மொத்த விற்பனையாளர்கள் நலனுக்காக வெளிமாவட்டங்களுக்கு சென்று சிரமமின்றி மளிகை பொருட்கள் கொள்முதல் செய்ய, சில்லறை விற்பனையாளர்கள் நடமாடும் விற்பனை வாகனம் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்வதற்கும் முறையான முன் அனுமதி சீட்டு வழங்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 
வழிகாட்டு நெறிமுறை
நகராட்சி பகுதிக்கு சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணைய ரிடமும், போரூராட்சி பகுதிக்கு சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், ஊரக பகுதிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும் வியாபாரிகள், வர்த்த கர்கள் தேவையான அளவு அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம். வாகனங்களில் விற்பனை செய்பவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காவல் கார்த்திக், கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சிவகாமி, சப்-கலெக்டர் சுகபுத்ரா, பரமக்குடி ஆர்.டி.ஓ. தங்கவேல் உட்பட அரசு அலுவலர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story