வருமானமின்றி தவிக்கும் படகு ஓட்டுனர்கள்


வருமானமின்றி தவிக்கும் படகு ஓட்டுனர்கள்
x
தினத்தந்தி 29 May 2021 10:58 PM IST (Updated: 29 May 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், படகு ஓட்டுனர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர். எனவே நிவாரண உதவி வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், படகு ஓட்டுனர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர். எனவே நிவாரண உதவி வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

படகு ஓட்டுனர்கள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு, கடந்த மாதம் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த வியாபாரிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக மோட்டார் படகு, துடுப்பு படகுகள் இயக்கப்பட்டது. இந்த படகுகளை ஓட்டுபவர்கள் தற்காலிகமாக பணிபுரிந்து வந்தனர்.

வருமானம் இல்லை

சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்கான கட்டணத்தை செலுத்தும் தொகையில், ஒரு முறை சவாரி சென்று வந்தால் படகு ஓட்டுனர்களுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை வருமானம் கிடைக்கும். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளதால், அவர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து ஊட்டி படகு இல்ல மோட்டார், துடுப்பு படகு ஓட்டுனர்கள் கோரிக்கை மனு ஒன்றை ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

வாழ்வாதாரம் இழப்பு

கடந்த 30 ஆண்டுகளாக ஊட்டி படகு இல்லத்தில் படகுகளை இயக்கி வருகிறோம். எங்களுக்கு அரசு ஊதியமோ அல்லது வேறு வருமானமோ கிடையாது. சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கும் பணத்தில் இருந்து எங்களுக்கு குறைவாக வருமானம் கிடைத்தது. 

இதுபோன்று கூலியாக கிடைப்பதை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தோம். சுற்றுலா பயணிகளை நம்பி நாங்கள் வாழ்வாதாரத்தை நகர்த்தி வந்தோம். சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். உதவி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே படகு ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி வழங்கி வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எதிர்பார்ப்பு

இதேபோல் பைக்காரா படகு இல்லத்தில் மோட்டார் படகு, அதிவேக படகுகளை தற்காலிக ஓட்டுனர்கள் இயக்கி வந்தனர். சுற்றுலா பயணிகளை நம்பி இருந்த அவர்கள், படகு இல்லம் மூடப்பட்டதால் வருமானம் இன்றி உள்ளனர். வேறு வருமானம் இல்லாததால் அரசின் உதவிக்காக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.


Next Story