டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட 121 பேருக்கு பணி நியமன ஆணை
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட 121 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட 121 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
ஆக்சிஜன் பிளாண்ட் திறப்பு
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள திரவ ஆக்சிஜன் பிளாண்ட் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு ஆக்சிஜன் பிளாண்டை திறந்து வைத்து பார்வையிட்டார்.
பணி நியமன ஆணை
தொடர்ந்து மருத்துவமனையில் 18 டாக்டர்கள், 62 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், ஆக்சிஜன் பிளாண்ட் தொழில்நுட்ப பணியாளர்கள், மருந்தாளுனர்கள் என மொத்தம் 121 பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் 121 பேருக்கு அமைச்சர் மெய்யநாதன் பணி நியமன ஆணை வழங்கி பேசினார். அப்போது அமைச்சர் கூறுகையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றிட டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முக்கிய மருத்துவ பணியாளர்கள் 121 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
120 ஆக்சிஜன் படுக்கைகள்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் பிளாண்ட் திறக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தடையின்றி வழங்க முடியும். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 120 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, உதவி கலெக்டர் பாலாஜி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜசேகரன், உதவி தலைமை மருத்துவ அலுவலர் வீரசோழன், நகராட்சி ஆணையர் சுப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story