கிணத்துக்கடவில் கொரோனா விதிகளை மீறிய தனியார் நிறுவனத்துக்கு ‘சீல்’
கிணத்துக்கடவில் கொரோனா விதிகளை மீறிய தனியார் நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
கிணத்துக்கடவு,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தொழிற்சாலைகள் குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களை கொண்டு செயல்படவும் அனுமதி வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவலை தடுக்க தொழிற்சாலைகளில் சுகாதாரத்துறையினர் நேரில் ஆய்வு செய்து, கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர். இதில் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே வடபுதூரில் உள்ள ஜெயந்தி புட் புராடக்ட்ஸ் மசாலா நிறுவனத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி அதிக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவின்பேரில், கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, வருவாய் ஆய்வாளர் ராமராஜ், சுகாதாரத் துறை ஆய்வாளர் குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர்கள் விமல் மாதவன், கேசவமூர்த்தி, மதுகண்ணன், முருகன் மற்றும் போலீசார் தனியார் நிறுவனத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் விதிமுறைகளை மீறி அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது தெரியவந்தது. இதனையடுத்து வருவாய் துறையினர் வேலையில் ஈடுபட்டிருந்த அனைவரையும் வெளியேற்றி, தனியார் நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story