கொரோனா தொற்று பரவலை தடுக்க கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
கொரோனா தொற்று பரவலை தடுக்க கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.
திருப்பத்தூர்
கொரோனா தொற்று பரவலை தடுக்க கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.
மருத்துவ முகாம்
திருப்பத்தூர் அருகே நெடுமரம் ஊராட்சியில் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம் நடைபெற்றது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி பேசினார். அவர் பேசும்போது கொரோனா தொற்று 2-ம் அலையால் பொதுமக்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இக்காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன், போதிய தடுப்பூசி பெறுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதேபோல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும், அரசு மருத்துவமனைகளில் போதியளவு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் தயார் படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா
நோய் தாக்குதலின் தன்மையை உணர்ந்து நகர்ப்பகுதி மட்டுமன்றி கிராமப்பகுதியில் உள்ளவர்களும் சிறியவர் முதல் பெரியவர் வரை சிறிதளவு உடல்நிலை பாதிக்கப்பட்டால் கூட உடனடியாக அரசு மருத்துவரை அணுகி மருத்துவ பரிசோதனை செய்து உரிய ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் கிராமப்பகுதிகள் தோறும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தவறாமல் அந்தந்த பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமை பயன்படுத்தி உடல் பரிசோதனை செய்து கொண்டு ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதிலிருந்து நிரந்தரமாக பாதுகாப்புப்பொருளாக இருக்கக்கூடியது தடுப்பூசி மட்டுமே. எனவே, தடுப்பூசியை தவறாமல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story