பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் கொரோனா தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர். அப்போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் அதிகாரிகளுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர். அப்போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் அதிகாரிகளுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் தற்போது அரசு ஆஸ்பத்திரி மற்றும் சில அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடுவது திடீரென நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் நாச்சிமுத்து பிரசவ விடுதி தடுப்பூசி போடும் மையமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக அங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள நபர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு முதல் தவணை அல்லது 2-வது தவணை தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று காலை 6 மணி முதல் கூட்டம் வரத் தொடங்கியது.
பிரசவ விடுதியில் இருந்து பெண்கள் கூட்டம் பஸ் நிலையம் வரை நின்றது. ஆண்கள் கூட்டம் குடிநீர் நீரேற்று நிலையத்தை தாண்டி நின்றது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் போக்குவரத்து வார்டன்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதிகாரிகளுடன் வாக்குவாதம்
இதற்கிடையில் தொழிற்சாலைகள் மூலம் ஏற்கனவே பதிவு செய்த தொழிலாளர்களை சிலர் அழைத்து வந்தனர். இதற்கு வரிசையில் நின்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தொழிலாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் என்று திடீரென்று அறிவிக்கப்பட்டது. இதனால் நீண்டநேரம் வரிசையில் நின்ற பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இருப்பு உள்ள தடுப்பூசிகளை மட்டும் அனைத்து தரப்பினருக்கும் போடுவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்கள்.
முற்றுகை
இதையடுத்து பணியாளர்கள் பிரசவ விடுதியின் நுழைவு வாயில் கேட்டை இழுத்து மூடினார்கள். விடுதிக்கு உள்ளே நின்றவர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ஒலிப்பெருக்கி மூலம் தடுப்பூசி முடிந்து விட்டது. எனவே வரிசையில் நிற்பவர்கள் கூட்டம், போடாமல் கலைந்து செல்லுமாறு அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பொதுமக்கள் நுழைவு வாயில் பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் வந்த வாகனத்தை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
டோக்கன் வினியோகம்
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இங்கு வந்த நபர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். மீண்டும் தடுப்பூசி போடும்போது டோக்கன் கொண்டு வரும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றனர்.
இதையடுத்து அதிகாரிகள் 484 பேருக்கு டோக்கன் வழங்கினர். டோக்கன் பெற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக நாச்சிமுத்து பிரசவ விடுதி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story