நெல்லையில் போலீசாருக்கு நீராவி பிடிக்கும் உபகரணங்கள் கமிஷனர் பிரவின்குமார் அபிநபு வழங்கினார்
நெல்லை மாநகரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு நீராவி பிடிக்க உபகரணங்களை போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபிநபு வழங்கினார்.
நெல்லை:
நெல்லை மாநகரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு நீராவி பிடிக்க உபகரணங்களை போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபிநபு வழங்கினார்.
நீராவி பிடித்தல்
நெல்லை மாநகரில் தற்போது கொரோனா தொற்று 2-வது அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும், ரோந்து பணியிலும் போலீசார் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.
இவ்வாறு வேலை செய்வோர், நீராவி பிடிப்பதால் சுவாச பிரச்சினை சீராகி உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நெல்லை மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்கள், போக்குவரத்து பிரிவு, நுண்ணறிவு பிரிவு உள்பட 40 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பிரிவுகளை சேர்ந்த போலீசார் அனைவரும் பயன்பெறும் வகையில் நீராவி பிடிப்பதற்கு என வடிவமைக்கப்பட்டுள்ள குக்கர், இன்டெக்சன் ஸ்டவ் மற்றும் மூலிகைகள் ஆகியவை ரூ.1.60 லட்சம் செலவில் ரோட்டரி சங்கம் சார்பில் தயார் செய்யப்பட்டது.
கமிஷனர் வழங்கினார்
இவற்றை வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நெல்லை சரக டி.ஐ.ஜி.யும், மாநகர போலீஸ் கமிஷனருமான பிரவின்குமார் அபிநபு கலந்து கொண்டு, 40 பிரிவுகளை சேர்ந்த போலீசாருக்கு நீராவி பிடிக்கும் உபகரணங்கள், மூலிகை பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை கமிஷனர் மகேஷ்குமார், சீனிவாசன், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், நெல்லை மாவட்ட சமூக சேவை துணை தலைவர் ஆறுமுகபெருமாள், மேற்கு ரோட்டரி சங்க தலைவர் பால் அண்ணா, செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சானிடைசர்
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து முககவசம், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி, நீராவி பிடிக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நெல்லை மாவட்ட போலீசார் அனைவரும் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொரோனா தொற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள, பாக்கெட் சானிடைசர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராஜூ (தலைமையகம்) மற்றும் நெல்லை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா ஆகியோரிடம் வழங்கினார்.
Related Tags :
Next Story