அரசு அறிவித்த விதிமுறையின் கீழ் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


அரசு அறிவித்த விதிமுறையின் கீழ்  கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்  தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 30 May 2021 12:51 AM IST (Updated: 30 May 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

அரசு அறிவித்த விதிமுறையின் கீழ் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்தார்.

தென்காசி:
அரசு அறிவித்த விதிமுறையின் கீழ் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்தார். 

ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தனியார் ஆஸ்பத்திரிகளின் டாக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதல்-அமைச் சரின் ஒருங்கிணைந்த விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 
கூட்டத்தில், கலெக்டர் சமீரன் பேசியதாவது:-

நடவடிக்கை

கொரோனா அறிவிக்கப்பட்ட நோய் என்பதால் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தொற்று பாதிப்புடன் யாராவது வந்தால் அதுகுறித்து உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

கொரோனா தொற்று அறிகுறி இருப்பின் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். இந்த பரிசோதனை மேற்கொள்ளாமல் சிகிச்சை அளித்துவிட்டு நோய் முற்றிய நிலையில் கடைசி நேரத்தில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதை தவிர்க்க வேண்டும். இதை மீறினால் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இலவச சிகிச்சை

கொரோனா நோய்க்கான சிகிச்சை செலவுகளை முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட நிதியில் இருந்து அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதால், நோயால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு அரசு அறிவித்துள்ள வழிமுறையின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.

இதுதொடர்பாக தேவைப்படும் உதவிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மருத்துவ அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர்களை அணுக வேண்டும். 

மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்தகங்களில் மருந்துகள் வழங்கப்படுவது, ஊசி போடுவது தெரியவந்தால் அந்த மருந்தகங்கள் மூடப்படும். கொரோனா தொற்று அறிகுறிக்கு சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி சிகிச்சை அளிக்க வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் நெடுமாறன், துணை இயக்குனர் (காச நோய்) டாக்டர் வெள்ளைச்சாமி, முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மருத்துவ அலுவலர்கள், மாவட்ட திட்ட அலுவலர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story