கருப்பு பூஞ்சை நோய்க்கு தொழிலதிபர் சாவு


கருப்பு பூஞ்சை நோய்க்கு தொழிலதிபர் சாவு
x
தினத்தந்தி 29 May 2021 9:36 PM GMT (Updated: 29 May 2021 9:36 PM GMT)

குமரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் பலியானார். மேலும் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் பலியானார். மேலும் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொழிலதிபர்
நாகர்கோவிலைச் சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் ஒருவர் சமீபத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து முழுமையாக குணமாகி வீடு திரும்பினார். பின்னர் ஒன்றிரண்டு நாட்கள் கழித்து அவருக்கு கண் வலி ஏற்பட்டது. மேலும் கண்ணில் இருந்து நீர் வழியத் தொடங்கியது.
முதல் பலி
இந்தநிலையில் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவருக்கு கண்ணில் கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். குமரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியான முதல் நபர் இவர் ஆவார்.
மேலும் 5 பேருக்கு பாதிப்பு
கருப்பு பூஞ்சை நோய்க்கு தொழிலதிபர் பலியான சம்பவம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் மற்றும் நோயாளிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 5 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story