மாவட்ட செய்திகள்

உணவின்றி தவிக்கும் நாய்- குரங்குகள் + "||" + Starving dog-monkeys

உணவின்றி தவிக்கும் நாய்- குரங்குகள்

உணவின்றி தவிக்கும் நாய்- குரங்குகள்
தளர்வில்லா ஊரடங்கால், அரியலூரில் நாய்கள் மற்றும் குரங்குகள் உணவின்றி தவித்து வருகின்றன.
அரியலூர்:

உணவின்றி தவிப்பு
அரியலூரில் கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, காலை 6 மணி முதல் 10 மணி வரை கடைகள் திறந்து இருந்தன. உணவு விடுதிகள், இறைச்சி கடைகள் திறந்து இருந்ததால் அங்கிருந்து எடுத்துச்சென்று கொட்டப்படும் மிஞ்சிய உணவுகள் மற்றும் மாமிச கழிவுகளை நகரில் உள்ள நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் தின்றன.
ஆனால் கடந்த 17-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. பொதுமக்கள் வீடுகளில் கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்து வருகின்றனர். இதனால் நகரில் உள்ள குரங்குகளும், நாய்களும் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன.
கோரிக்கை
கடைகள் திறந்திருக்கும்போது குரங்குகள் பழம், பிஸ்கட் போன்ற பொருட்களை எடுத்துச்சென்று விடும். வீடுகளில் உணவு பொருட்கள் போன்றவற்றையும் எடுத்துச்சென்று விடும். ஆனால் தற்போது அதற்கு வழியில்லாத நிலை உள்ளது. மேலும் நாய்கள் உண்ண உணவில்லாமல் கடந்த 10 நாட்களாகவே சாலையில் திரிந்து வருகின்றன. கைகளில் ஏதேனும் உணவு பொருட்களை எடுத்துச் செல்லும் சிறுவர், சிறுமிகளிடம் இருந்து பொருட்களை கவ்விச்சென்று விடுகின்றன.
காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மீன், கோழி, இறைச்சி கடைகள் பகுதியில் உள்ள நாய்கள் வெறிபிடித்து பொதுமக்களை கடிக்கும் அளவிற்கு சுற்றி வருகின்றன. எனவே நகராட்சி நிர்வாகம், வனத்துறை ஆகியவை இணைந்து தெரு நாய்களையும், குரங்குகளையும் பிடித்து ஒரு இடத்தில் அடைத்து, அவற்றுக்கு தேவையான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.