கட்டுப்பாடுகளை மீறி சுற்றிய வாலிபர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


கட்டுப்பாடுகளை மீறி சுற்றிய வாலிபர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 May 2021 9:47 PM GMT (Updated: 29 May 2021 9:47 PM GMT)

தினத்தந்தி செய்தி எதிரொலியாக கட்டுப்பாடுகளை மீறி சுற்றிய வாலிபர்களின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பரவிய நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இளைஞர்களும், பொதுமக்களும் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றனர். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தியில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தீவிர வாகன சோதனையில் ஈடுபட செந்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் நேற்று காலை முதல் செந்துறை பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கட்டுப்பாடுகளை மீறி சுற்றித்திரிந்த வாலிபர்களிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வயதானவர்கள் மற்றும் பெண்களை எச்சரித்து அனுப்பினர். இதனைக் கண்ட பொதுமக்கள், உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸ் சூப்பிரண்டுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.

Next Story