கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறக்கப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு
கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஈரோடு
கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கீழ்பவானி வாய்க்கால்
ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களின் விவசாயிகளின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக பவானிசாகர் அணையும், கீழ்பவானி வாய்க்காலும் உள்ளன.
கீழ்பவானி வாய்க்கால் பாசனம் தொடங்கி 60 ஆண்டுகள் கடந்த நிலையில் வாய்க்காலை புதுப்பிக்கும் வகையில் கீழ்பவானி சீரமைப்பு வேலைகள் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டு பணிகள் தொடங்கின. ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் செய்ய ஒரு தரப்பு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதால் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஒரு தரப்பினரும், தற்போது நடைபெறுவது கான்கிரீட் தளம் அமைப்பு இல்லை, பழுதடைந்த மதகுகள் மற்றும் பலம் இழந்த கரைகளை மீண்டும் மண்ணால் பலப்படுத்தும் நடவடிக்கை என்று ஒரு தரப்பும் கூறுகிறார்கள்.
இதனால் ஒட்டு மொத்த விவசாயிகளும் குழப்பத்தில் உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிரச்சினைக்குரிய பல இடங்களில் தங்கள் துறை சார்பில் விளக்க கூட்டங்கள் நடத்தியும் உள்ளனர்.
தண்ணீர் திறப்பு
இந்தநிலையில் கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே வாய்க்கால் சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்கு எதிர் தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டன.
பவானிசாகர் அணையில் வழக்கமாக ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். 2 கட்டமாக வழங்கப்படும் இந்த தண்ணீர் மூலம் 3 மாவட்டங்களிலும் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. ஆனால் தற்போதைய நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அமைச்சரிடம் சந்திப்பு
நசியனூர் உள்பட சில பகுதிகளில் வாய்க்கால் சீரமைப்பு பணிக்காக ஒப்பந்தம் பெற்ற காண்டிராக்டர்கள் பணிகளை தொடங்கினார்கள். ஆனால் எதிர்ப்பு காரணமாக அந்த பணிகள் முடக்கப்பட்டன. எனவே கரைகள் உடைக்கப்பட்டு, மழை நீர் கூட வாய்க்காலில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் 2 தரப்பு பிரதிநிதிகளும் தனித்தனியாக சந்திப்பு நடத்தினார்கள். இந்த சந்திப்பு மூலம் விவசாயிகளுக்கு அவசியமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் கி.வடிவேல், தமிழக விவசாயிகள் சங்கம் (கே.சி.) மாநில தலைவர் கே.சி.ரத்தினசாமி, தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.பெரியசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏ.எம்.முனுசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே.பொன்னையன், புகழுர் பாரி சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்க தலைவர் எம்.வி.சண்முகராஜ், தமிழக இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி அறச்சலூர் ஆர்.செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தவறான கருத்து
கீழ்பவானி பாசன கட்டமைப்பு செயல் இழந்து பாசனத்திறனை முற்றாக இழந்து வருகிறது. ஒவ்வொரு பாசன காலத்திலும் ஆயக்கட்டு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களின் நிலங்களுக்கு சேரவேண்டிய தண்ணீர் சென்று சேராமல் பெரும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது கீழ்பவானி பாசன கட்டமைப்பை நவீனப்படுத்தி மேம்படுத்த மோகன கிருஷ்ணன் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் அறிக்கையின்படி கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ரூ.615 கோடியை ஒதுக்கீடு செய்தார். ஆட்சி மாற்றம் காரணமாக அப்போது அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது ரூ.933 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டம் என்பது முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோதே எடுக்கப்பட்டது. ஆனால், அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இந்த திட்டம் அ.தி.மு.க. அரசில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவாக்கி அறிவித்ததுபோன்று தவறான கருத்தினை கூறி வருகிறார்கள்.
நிறைவேற்ற கோரிக்கை
எங்களது தெளிவான கோரிக்கை என்னவென்றால், திட்டப்படி வேலைகள் தடையின்றி நடைபெற வேண்டும். புதிதாக குழுக்கள் அமைப்பது, புதிதாக ஆய்வு செய்வது என்று புதிய ஆலோசனைகள் செய்தால் அது திட்டத்தை முடக்குவதாக அமையும். ஏற்கனவே பல வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து ஒரு திட்டத்தை தொடங்கி இருக்கும் நிலையில், அதை பின்னோக்கி தள்ளிவிடும் முயற்சிகள் சரியல்ல.
1996-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி காலத்தில் கீழ்பவானி வாய்க்கால் மேம்படுத்தும் பணி தொடங்கியது. தி.மு.க. காலத்தில் தொடங்கிய இந்த பணிகளை 2021-ம் ஆண்டு முதல்-அமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தரவேண்டும். தி.மு.க. கொண்டு வந்த திட்டத்தை தி.மு.க. நிறைவு செய்து பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story