முழு ஊரடங்கால் ஏலம் ரத்து: சேலம் லீ பஜாரில் 200 டன் மஞ்சள் தேக்கம் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு


முழு ஊரடங்கால் ஏலம் ரத்து: சேலம் லீ பஜாரில் 200 டன் மஞ்சள் தேக்கம் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 30 May 2021 5:30 AM IST (Updated: 30 May 2021 5:33 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கால் ஏலம் ரத்து செய்யப்பட்டதால் சேலம் லீ பஜாரில் 200 டன் மஞ்சள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

தமிழகத்தில் ஈரோடுக்கு அடுத்தபடியாக சேலத்தில் தான் மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், ஓமலூர், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, மேட்டூர் உள்பட பல பகுதிகளிலும் மஞ்சள் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் சேலம் லீ பஜார் மஞ்சள் மண்டிக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்கிறார்கள். 

ஆனால் கொரோனா 2-வது அலை காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சேலம் லீ பஜாரில் கடந்த 3 வாரங்களாக மஞ்சள் ஏலம் நடைபெறவில்லை. இதனால் சுமார் 200 டன் அளவில் மஞ்சள் தேக்கம் அடைந்துள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மஞ்சள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

ஏலம்

இதுகுறித்து சேலம் லீ பஜாரை சேர்ந்த மஞ்சள் வியாபாரிகள் கூறியதாவது:-
சேலம் லீ பஜார் மஞ்சள் மண்டி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் புதன்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கும். இந்த ஏலத்திற்கு சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மஞ்சளை மொத்தமாக கொண்டு வருவார்கள். தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மஞ்சளை ஏலம் எடுக்க வியாபாரிகள் வருவதுண்டு. 

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதம் புது மஞ்சள் அதிக அளவில் வந்தது. புது மஞ்சளை ஏலம் எடுக்க வியாபாரிகள் அதிகமாக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.11 ஆயிரத்துக்கு ஏலம் போனது. 

ரூ.5 கோடி

தற்போது கொரோனா முழு ஊரடங்கு காரணமாக ஏப்ரல் 2-வது வாரத்தில் இருந்தே மஞ்சள் விற்பனை குறைய தொடங்கியது. தற்போது முழு ஊரடங்கு காரணமாக 3 வாரங்களாக மஞ்சள் ஏலம் நடைபெறாததால் சுமார் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story