தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 30 May 2021 12:02 AM GMT (Updated: 30 May 2021 12:02 AM GMT)

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சேலம்:
அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆய்வு கூட்டம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. ஆனால் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பாதிப்பு குறைகிறது
ஒரு சில மாவட்டங்களை தவிர ஓரளவுக்கு தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் காய்ச்சல், சளி, இருமல் வந்தால் 3 நாட்களுக்கு பொதுமக்கள் சிகிச்சைக்கு செல்வதில்லை. அதன் பிறகு 5 நாட்களுக்கு பிறகு அதாவது காலதாமதமாக கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்கிறார்கள். இதனால் மூச்சுத்திணறல், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை காரணங்களால் உயிரிழக்க நேரிடுகிறது. 
எனவே காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியும். கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்குமா? என்பது தெரியாது. இருந்தபோதிலும் இது சம்பந்தமாக முன்னெச்சரிக்கையாக மருத்துவ குழுவுடன் ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கு ஏற்றவாறு மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம். 
தடுப்பூசி
தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே நம்மிடம் தடுப்பூசி இருப்பு உள்ளது. இருந்தபோதிலும் கூடுதலாக தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும். 
இவ்வாறு டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 
முன்னதாக சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். 

Next Story