முழு ஊரடங்கு: ஓமலூர் பகுதியில்வெல்லம் உற்பத்தி பாதிப்பு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு


முழு ஊரடங்கு: ஓமலூர் பகுதியில்வெல்லம் உற்பத்தி பாதிப்பு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு
x
தினத்தந்தி 30 May 2021 12:02 AM GMT (Updated: 30 May 2021 12:02 AM GMT)

வெல்லம் உற்பத்தி பாதிப்பு

ஓமலூர்:
முழு ஊரடங்கு காரணமாக ஓமலூர் பகுதியில் வெல்லம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
கரும்பு ஆலைகள்
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளான காமலாபுரம், பொட்டியபுரம், சக்கரை செட்டியபட்டி, தும்பிபாடி, சின்னேரி காடு, டேனிஸ்பேட்டை உள்ளிட்ட இடங்களில் 150-க்கும் மேற்பட்ட ெவல்லம் உற்பத்தி செய்யும் கரும்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் வெல்லம் தயாரிக்க தேவையான கரும்புகளை சேலம் மாவட்டம் முழுவதும் டன் கணக்கில் விவசாயிகளிடம் இருந்து ஆலை உரிமையாளர்கள் கொள்முதல் செய்கிறார்கள். 
கரும்புகளை அரைத்து அதில் இருந்து பால் எடுத்து கொப்பரையில் வைத்து காய்ச்சி வெல்லம் தயாரித்து வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் வெல்லம் சேலம் லீ பஜார் மார்க்கெட், ஈரோடு மாவட்டம் சித்தோடு மார்க்கெட்டுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் அதிக சுவையுடன் இருப்பதால் சேலம் மார்க்கெட்டில் நல்ல விலை போகும். 
தொழிலாளர்கள்
ஒரு கரும்பு ஆலையில் வெல்லம் உற்பத்தி செய்ய சுமார் 5 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்களும், கரும்புகளை அறுவடை செய்து டிராக்டரில் ஏற்றி வர 10 ஆட்களும் வேலை செய்து வருகின்றனர். மேலும் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை சரக்கு வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதால், வாகன உரிமையாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன்படி ஒரு கரும்பு ஆலை மூலம் 20 முதல் 25 பேர் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வந்தனர்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓமலூர் பகுதியில் வெல்லம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் விளைந்த கரும்புகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். 
இழப்பீடு
இதனிடையே உற்பத்தி செய்த வெல்லத்தையும் விற்க கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் இருப்பு வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கரும்பு ஆலையில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story