தஞ்சையில் சோதனை சாவடி மீது லாரி மோதல்; சப்-இன்ஸ்பெக்டர்-பெண் போலீஸ் காயம்
தஞ்சையில், சோதனை சாவடி மீது லாரி மோதியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும், பெண் போலீசும் காயம் அடைந்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி விசாரிப்பதுடன், தேவையின்றி வலம் வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய ஆங்காங்கே தற்காலிக சோதனை சாவடிகளை போலீசார் அமைத்துள்ளனர். தஞ்சை மாநகரில் தொல்காப்பியர் சதுக்கம், கோடியம்மன் கோவில், ராமநாதன் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை கோடியம்மன் கோவில் அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அந்த சாலையில் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோடை காலம் என்பதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்காக, தென்னை கீற்றாலான பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பந்தல் நிழலில் நின்று கொண்டு அந்த வழியாக வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் தஞ்சையில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான சாக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி சென்றது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக சோதனை சாவடிக்காக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் மற்றும் பந்தல் மீது மோதியது. இதனால் பந்தல் சரிந்து கீழே விழுந்தது.
லாரி ேமாதியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் சேவியர்(வயது54) தலையில், பந்தலில் இருந்த கட்டைகள் விழுந்தன. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளிவந்தது. மேலும், பெண் போலீஸ் காயத்ரி என்பவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக போலீசார் உடனடியாக அங்கு ஆம்புலன்சை வரவழைத்தனர். அதற்குள்ளாக இந்த சம்பவம் பற்றி அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் அங்கு விரைந்து சென்றார்.
அவர் உடனே தனது போலீஸ் ஜீப்பில், காயம் அடைந்த பிரான்சிஸ் சேவியர் மற்றும் காயத்ரி இருவரையும் ஏற்றிக்கொண்டு தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.
தலையில் பலத்த காயம் அடைந்த பிரான்சிஸ் சேவியருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியை போலீசார் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து மேற்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story