தஞ்சையில் முழு ஊரடங்கில் திறந்திருந்த 3 கடைகளுக்கு சீல் - ஜெராக்ஸ் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு


தஞ்சையில் முழு ஊரடங்கில் திறந்திருந்த 3 கடைகளுக்கு சீல் - ஜெராக்ஸ் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 30 May 2021 10:36 AM GMT (Updated: 30 May 2021 10:36 AM GMT)

தஞ்சையில் முழு ஊரடங்கில் திறந்திருந்த 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஜெராக்ஸ் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கில் மருந்து கடைகள், நாட்டு மருந்து கடைகள், பால் விற்பனை கடைகள் முழுவதுமாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், டீக்கடைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை. இதற்கு பதிலாக தள்ளுவண்டி, மினிவேன்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், மளிகைப்பொருட்களை வீட்டிற்கே வந்து வழங்குவதற்காக தஞ்சை மாநகரில் 13 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முறையாக அனுமதி பெறாமல் காய்கறிகள், மளிகைப்பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதையும் மீறி கடைகள் செயல்படுகிறதா? என அதிகாரிகள், போலீசார் அடங்கிய குழுவினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் தஞ்சை மாநகரில் அரசின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? விதிமீறல்கள் இருக்கிறதா? என தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தஞ்சை சீனிவாசபுரம் சேப்பனாவாரி பகுதியில் மளிகைக்கடை, முட்டை கடை ஆகியவை திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்ததுடன், கடைகளின் முன்பு மக்கள் பொருட்களை வாங்கி கொண்டு இருந்தனர். இதை பார்த்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று கடைகளை திறந்து வைத்திருந்த அதன் உரிமையாளர்களை எச்சரிக்கை செய்ததுடன் மளிகைக்கடை, முட்டை கடையை பூட்டி சீல் வைத்தனர். தஞ்சை வடக்குவாசல் பகுதியில் மளிகைக்கடை ஒன்று திறக்கப்பட்டு வியாபாரம் செய்ததால் அந்த கடையும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மேலும் முட்டை கடை உரிமையாளர் மற்றும் தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடை உரிமையாளருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மளிகைக்கடை உரிமையாளர்கள் மீது தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story