ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 30 May 2021 5:17 PM IST (Updated: 30 May 2021 5:17 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி பகுதியில் இருந்து லாரியில் ஆந்திராவுக்கு கடந்த முயன்ற 12½ டன் ரேஷன் அரிசி பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

வாகன தணிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி லாரியில் வேலூர் மாவட்டம் வழியாக கடத்தி செல்லப்படுவதாக கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பறக்கும்படை தாசில்தார் கோட்டீஸ்வரன், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் தலையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவு 1 மணியளவில் அந்த வழியாக வந்த கர்நாடகா பதிவெண் கொண்ட லாரியை அந்த குழுவினர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டு, அதன் மேல் தார்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது.

லாரியுடன் 12½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அதையடுத்து லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர் குடியாத்தம் தாலுகா நத்தமேடு கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் (வயது 28) என்பதும், வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து 253 மூட்டைகளில் 12½ டன் ரேஷன் அரிசியை வேலூர் மாவட்டம் வழியாக ஆந்திராவுக்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது. அதையடுத்து அரிசி மூட்டைகளுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபகிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அரவிந்தன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடியாத்தம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Story