பனங்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் - முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


பனங்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் - முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 May 2021 7:38 PM IST (Updated: 30 May 2021 7:38 PM IST)
t-max-icont-min-icon

பனங்குடியில் கொரோனா தடுப்பூசி முகாமை முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.



திட்டச்சேரி,

திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. பனங்குடி ஊராட்சியில் அமிர்தாநகர், சமத்துவபுரம், பி.பனங்குடி ஆகிய மூன்று இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதில் 300 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) க.அன்பரசன், டாக்டர்கள் பிரித்திவிராஜ், மணிவேல், திருமருகல் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வ.செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல திருப்பயத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 4 படுக்கைகளை டாக்டர் அபிநயாவிடம் வழங்கினார்.

இதேபோல கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமில் தேவூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அகிலன் தலைமையில் சுகாதாரத்துறை பணியாளர்கள், 63 பேருக்கு தடுப்பூசி போட்டனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி, ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி எழுத்தர் செந்தமிழன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெண்மணி ஊராட்சிக்குட்பட்ட கீழவெண்மணி, கீழகாவலாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி தலைவர் மகாதேவன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மருத்துவ அலுவலர்கள், கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட பலர் கொண்டனர். இந்த முகாமில் 18 முதல் 44 வயதினர் 180 பேருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட 72 பேருக்கும் என மொத்தம் 252 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஆறுகாட்டுதுறையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை வேதாரண்யம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் ராஜசேகர், சுந்தர்ராஜன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இதேபோல் குரவப்புலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், துணைத் தலைவர் ராமசுப்பு ஆகியோர் தலைமையிலும், தேத்தாகுடி தெற்கில் ஊராட்சி மன்றத்தலைவர்

வனஜா சண்முகம் தலைமையிலும், செம்போடையில் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தலைமையிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது முகாமிற்கு ஊராட்சிமன்ற தலைவர் நெல்சன் யாசர் பிரபு தலைமை தாங்கினார். இதில் ஆயக்காரன்புலம், தென்னம்புலம், மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Next Story