தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை 7 லட்சத்தை எட்டுகிறது - தினமும் 6,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை


தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை 7 லட்சத்தை எட்டுகிறது - தினமும் 6,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை
x
தினத்தந்தி 30 May 2021 7:46 PM IST (Updated: 30 May 2021 7:46 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டுகிறது. மேலும் தற்போது தினமும் 6,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா 2-வது அலை தாக்கம் அதிகமாக உள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள். நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலமும் இந்த பரிசோதனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சை மாநகரில் மட்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, கரந்தை, மானம்புச்சாவடி, கல்லுக்குளம், சீனிவாசபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் பரிசோதனை மையம், சிறப்பு முகாம்கள் மூலமும் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கொரோனா பரிசோதனைகளும் நாளுக்குநாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 25-ம் தேதிக்கு பிறகு கொரோனா பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 25-ந்தேதி 5 ஆயிரத்து 513 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் தினமும் அதிகப்படியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த 26-ந் தேதி 5 ஆயிரத்து 447 பேருக்கும். 27-ந் தேதி 6 ஆயிரத்து 926- க்கும் மேற்பட்டவர்களுக்கும், 28-ந் தேதி 6 ஆயிரத்து 753 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று தஞ்சை மாவட்டத்தில் 6ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று வரை 6 லட்சத்து 96 ஆயிரத்து 145 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 45 ஆயிரத்து 737 பேர் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 37 ஆயிரத்து 600 குணமடைந்து இதுவரை வீடு திரும்பியுள்ளனர். 506 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story