கொரோனா அச்சத்தை உணராமல் மீன்பிடிக்க திரண்ட கிராம மக்கள்
நிலக்கோட்டை அருகே கொரோனா அச்சத்தை உணராமல் கண்மாயில் மீன் பிடிக்க கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சீத்தாபுரம் பாப்பன்குளம் கண்மாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழைக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
இதனால் கண்மாயில் மீன்கள் அதிகம் காணப்பட்டது. இதையறிந்த அப்பகுதி சேர்ந்த சிறுவர்கள் தூண்டிலிட்டு மீன்களை பிடித்து வந்தனர்.
தற்போது முழு ஊரடங்கு காலம் என்பதால் வீலிநாயக்கன்பட்டி, கோவில்பட்டி, குளத்துப்பட்டி, நூத்துலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் மீ்ன் பிடிக்க திரண்டனர்.
அவர்கள் யாரும் கொரோனா அச்சத்தை உணராமல் திரண்டு கண்மாயில் மீன் பிடித்தனர். இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நூத்துலாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி, நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகனுக்கு தகவல் கொடுத்தார்.
உடனே போலீசார் விரைந்து வந்து மீன் பிடிக்க வந்த பொதுமக்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story