என்.ஐ.டி. சிகிச்சை மையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்த கொரோனா நோயாளி சாவு


என்.ஐ.டி. சிகிச்சை மையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்த கொரோனா நோயாளி சாவு
x
தினத்தந்தி 30 May 2021 9:43 PM IST (Updated: 30 May 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி என்.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்த கொரோனா நோயாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவெறும்பூர், 
திருச்சி என்.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்த கொரோனா நோயாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா நோயாளி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி.யில் கொரோனா நோயாளிகளுக்கான தனிமை சிகிச்சை முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் (வயது 41), இவருடைய மனைவி ஜான்சிராணி ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 27-ந் தேதி முதல் அங்கு சிகிச்சைக்காக சேர்ந்தனர். ஆரோக்கியராஜ் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி கடந்த 7 ஆண்டுகளாக மனநல சிகிச்சை மையத்தில் மருந்துகள் பெற்று சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மாடியில் இருந்து குதித்தார்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆரோக்கியராஜ் முகாமின் 2-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் அவருக்கு இடது தொடை எலும்பு முறிந்தது. மேலும் கீழ் தாடையும் உடைந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். 
இதைக்கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

சிகிச்சை பலனின்றி சாவு

தகவலறிந்த திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். ஆரோக்கியராஜின் மனைவி ஜான்சிராணியிடமும் இதுகுறித்து விசாரித்தனர். இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியராஜ் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 

முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்போது கொரோனா பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். திருச்சியில் கொரோனா நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story