மாவட்ட செய்திகள்

ஊட்டியில் கொரோனா நோயாளிகளுக்காக கூடுதலாக தற்காலிக கழிப்பறைகள் + "||" + Additional temporary toilets for corona patients in the feed

ஊட்டியில் கொரோனா நோயாளிகளுக்காக கூடுதலாக தற்காலிக கழிப்பறைகள்

ஊட்டியில் கொரோனா நோயாளிகளுக்காக கூடுதலாக தற்காலிக கழிப்பறைகள்
ஊட்டியில் கொரோனா நோயாளிகளுக்காக கூடுதலாக வெந்நீர் கொதிகலன்கள், தற்காலிக கழிப்பறைகள் அமைக்க சுகாதாரத்துறை ஏற்பாடு செய்து உள்ளது.
ஊட்டி,

நீலகிரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 500-ஐ கடந்து உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கியது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் சிகிச்சை பெறுபவர்களும் அதிகரித்து வருகின்றனர். 

தொற்று உறுதியானவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

கொரோனா உறுதியாகி ஆக்சிஜன் தேவைப்படாத நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மலைப்பிரதேசம் என்பதால் தண்ணீர் எப்போதும் குளிர்ந்த நிலையில் காணப்படும். 

மையத்தில் கொரோனா நோயாளிகள் குளிப்பதற்காக ஏற்கனவே கீசர்கள் (வெந்நீர் கொதிகலன்) இருந்தன. இருப்பினும், அங்கு அதிகம் பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், கூடுதலாக வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நோயாளிகளுக்காக தற்காலிக கழிப்பறை, குளியலறை பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. 

மேலும் 10 கீசர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. புதிதாக அமைத்த கழிப்பறைக்கு குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

இதேபோல் ஊட்டி பழங்குடியினர் கல்லூரி மாணவியர் விடுதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தொற்று பாதிப்பு குறைந்த பின்னர், அங்கு நோயாளிகள் மாற்றப்படுகின்றனர். நோயாளிகளுக்காக புதிதாக 9 கீசர்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கொரோனா நோயாளிகள் சூடான தண்ணீரை பயன்படுத்த முடியும். குளிர் பிரதேசமான ஊட்டியில் பயன்படுத்தப்படும் தண்ணீர் எப்போதும் குளிர்ந்த நிலையில் இருக்கும். 

இதை கருத்தில் கொண்டும், நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் சுகாதாரத்துறை மூலம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.