தொடர் மழையால், அறுவடைக்கு தயாரான முட்டைக்கோஸ் பயிர்கள் அழுகின
கோத்தகிரியில் பெய்த தொடர் மழையால், அறுவடைக்கு தயாரான முட்டைக்கோஸ் பயிர்கள் அழுகின. இதனால் நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, மேரக்காய், காலிபிளவர் போன்ற மலைக்காய்கறிகளை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இது தவிர இங்கிலீஷ் காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது.
விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்யும் காய்கறிகளை உள்ளூர் மார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள மார்க்கெட்டுக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் காய்கறிகள் வாங்கி கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைக்கோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளது. ஊரடங்குக்கு மத்தியிலும் பயிர்களை விவசாயிகள் நன்கு பராமரித்து வந்தனர்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென தொடர் மழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி அறுவடைக்கு தயாராக இருந்த முட்டைக்கோஸ் பயிர்கள் அழுக தொடங்கிவிட்டன.
இதுமட்டுமின்றி ஊரடங்கு காரணமாக மார்க்கெட்டுகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் முட்டைக்கோஸ்களை அறுவடை செய்து, விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. எனினும் அரசின் நடவடிக்கையால் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால், அதற்கு விற்பனை செய்ய விவசாயிகள் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் மழையால் அவை அழுகி வருவதால், கவலை அடைந்து இருக்கின்றனர். இதுகுறித்து ஈளாடா பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- ஊரடங்கு காரணமாக மார்க்கெட்டுகள் மூடப்பட்டு இருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் வருவதால், அரசு மூலம் முட்டைகோஸ்களை விற்பனை செய்து விடலாம் என்று நினைத்து இருந்தோம். எனினும் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்துதான் இருந்தது.
ஆனால் எதிர்பாராமல் பெய்த மழையால், அறுவடைக்கு தயாராகி இருந்த முட்டைக்கோஸ் பயிர்கள் அழுகிவிட்டன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் பயிர் கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தோம்.
தற்போது அடுத்த சாகுபடிக்கு கூட வருமானம் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். எங்கள் நிலையை கருத்தில் கொண்டு உரிய நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story