வயிற்றில் காயத்துடன் இறந்து கிடந்த காட்டுயானை


வயிற்றில் காயத்துடன் இறந்து கிடந்த காட்டுயானை
x
தினத்தந்தி 30 May 2021 10:21 PM IST (Updated: 30 May 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

சீகூர் வனப்பகுதியில் வயிற்றில் காயத்துடன் காட்டுயானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி, முதுமலையில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டுயானை, சிறுத்தைப்புலி, மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகளையும், வனப்பகுதியையும் பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் தினமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சீகூர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வழக்கம்போல் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஆனைகட்டி வனப்பகுதியில் காட்டுயானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் அங்கு அவர்கள் விரைந்து வந்து, இறந்து கிடந்த காட்டுயானையை பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு காட்டுயானையின் உடல் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

அப்போது இறந்து கிடந்தது, 1½ வயது மதிக்கத்தக்க பெண் காட்டுயானை என்பது தெரியவந்தது. மேலும் அதன் அடி வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. தொடர்ந்து முக்கிய உடற்பாகங்களை வனத்துறையினர் ஆய்வுக்காக சேகரித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த காட்டுயானையின் உடல் பிற வனவிலங்குகள் சாப்பிடுவதற்காக அப்பகுதியில் விடப்பட்டது.  தொடர்ந்து அந்த காட்டுயானை எவ்வாறு இறந்தது? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் காட்டுயானைகள் தொடர்ந்து உயிர் இழந்து வருகின்றன. இதனால் வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

Next Story