7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 30 May 2021 4:52 PM GMT (Updated: 30 May 2021 4:52 PM GMT)

ராமநாதபுரத்தில் வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த 6 பேர் உள்பட 7 பேர் மீது ஒரேநாளில் குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த 6 பேர் உள்பட 7 பேர் மீது ஒரேநாளில் குண்டர் சட்டம் பாய்ந்தது.

வழக்குப்பதிவு

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கல்கிணற்று வலசை பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மகன் தேவா என்ற தேங்காமட்டை (வயது26). இவரை கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி இரவு முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஓடஓட விரட்டி கழுத்தை துண்டாக அறுத்து கொலை செய்து உடல் வேறு இடத்திலும் தலை வேறு இடத்திலும் போட்டுச்சென்றனர். 
இந்த சம்பவம் தொடர்பாக தேவாவின் அண்ணன் மூர்த்தி (33) அளித்த புகாரின் அடிப்படையில் உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உச்சிப்புளி கட்டக்காரன்வலசை ராமு மகன் கணேசமூர்த்தி (23), கீழநாகாச்சி முருகேசன் மகன் கார்த்திக் (24), மரவெட்டிவலசை களஞ்சியம் மகன் தினேஷ் (23), சங்கந்தியான் வலசை முனியசாமி மகன் திருஞானம் (23), மரவெட்டிவலசை ஏழுமலை மகன் விஜய் (22) சண்முகம் மகன் மணிமாறன் (23) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

உத்தரவு

இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் அளித்த பரிந்துரையை ஏற்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அதற்கான உத்தரவிட்டுள்ளார். இவர்களில் கார்த்திக் என்பவர் ராமநாதபுரம் மாவட்ட சிறையிலும், மற்ற 5 பேரும் மதுரை சிறையில் உள்ள நிலையில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மேற்கண்ட 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.
இதேபோல ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளம் பகுதி போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒச்சத்தேவன் கோட்டையை சேர்ந்த சுப்பையா மகன் வேலாயுதம் (56) அவரின் மகன் சண்முகநாதன் (26) ஆகியோரை மடக்கி சோதனையிட்டனர் அவர் களிடம் 28 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. 

பரிந்துரை

இதனை தொடர்ந்து 2 பேரையும் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் கைது செய்து சிறையில் அடைத்தார். இதில் சண்முகநாதன் மீது முன்னதாக மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் சண்முகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அதற்கான உத்தரவிட்டுள்ளார். 
இதனை தொடர்ந்து கோவிலாங்குளம் போலீசார் சண்முகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்த 6 பேர் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் என ஒரேநாளில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story