சிங்காரா, சீகூர் வனப்பகுதியில் அரிய வகை கழுதைப்புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


சிங்காரா, சீகூர் வனப்பகுதியில் அரிய வகை கழுதைப்புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 May 2021 10:41 PM IST (Updated: 30 May 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

சிங்காரா, சீகூர் வனப்பகுதியில் அரிய வகை கழுதைப்புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், கரடிகள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி, சிங்காரா, சீகூர் உள்ளிட்ட வனப்பகுதியில் புலிகள், கரடிகள் அதிகளவு காணப்படுகிறது. இது தவிர அரிய வகை கழுதைப்புலிகள் மற்றும் பிணந்தின்னி கழுகுகளும் உள்ளது.

ஆனால் இவைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளை புலி உள்ளிட்ட வனவிலங்குகள் கடித்து கொன்று விடுவது வழக்கம். இதில் மீதமாகும் பாகங்களை கழுதைப்புலிகள், பிணந்தின்னி கழுகுகள் தின்று வாழ்கிறது. 

இருப்பினும் கழுதைப்புலிகள், பிணந்தின்னி கழுகுகளின் எண்ணிக்கை மிகச்சொற்ப அளவில் இருந்தது. கடந்த 2019-20-ம் ஆண்டில் கழுதை புலிகளின் எண்ணிக்கை 13 ஆக பதிவாகியிருந்தது.

 நடப்பாண்டில் கழுதை புலிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. வனங்களின் தன்மைக்கு ஏற்ப கழுதைப்புலிகளின் எண்ணிக்கை சுமார் 30 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று வன ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கழுதைப்புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் அதன் உருவங்கள் அதிகமாக பதிவாகி உள்ளது.

இருப்பினும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கழுதைப்புலிகள் உள்ளது என்று உறுதியாக கூற முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story