கல்வராயன்மலையில் போலீசார் அதிரடி சோதனை காட்டுக்கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 6 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்


கல்வராயன்மலையில் போலீசார் அதிரடி சோதனை காட்டுக்கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 6 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 May 2021 10:44 PM IST (Updated: 30 May 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன் மலையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் காட்டுக்கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 6 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கச்சிராயப்பாளையம்

ரகசிய தகவல்

கல்வராயன்மலையில் மலைவாழ் மக்கள் சிலர் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு வன விலங்குகளை வேட்டையாடி வருவதோடு, குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவிட்டார். 

6 நாட்டுத்துப்பாக்கிகள்

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராமுலு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ராமச்சந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், நரசிம்ம ஜோதி, ராஜா, துரைராஜ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீசார் கல்வராயன் மலையில் உள்ள தாழ்மதூர் மற்றும் தாள்கெண்டிகை ஆகிய கிராமங்களில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வெவ்வேறு விவசாய நிலங்களில் உள்ள காட்டுக்கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 6 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் கண்டுபிடித்தனர். சுய பாதுகாப்பு மற்றும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும் துப்பாக்கியை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. ஆனால் துப்பாக்கிகளை வைத்திருக்க எந்த வித அனுமதியும் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

5 பேருக்கு வலைவீச்சு

மேலும் இது தொடர்பாக தாழ் மதூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் மாயவன்,  சடையன் மகன் கோவிந்தன், அண்ணாமலை மகன் முனியன், தாழ் கென்டிக்கல் கிராமத்தை சேர்ந்த சின்னபையன் மகன் ஆண்டி, அண்ணாமலை மகன் தர்மன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.  
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்வராயன் மலையில் நாட்டு துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து சுமார் 500-க்கும் மேற்பட்ட நாட்டுத் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

வீடு வீடாக...

இந்த நிலையில் கல்வராயன் மலையில் 6 நாட்டுத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதால் கல்வராயன் மலையில் மீண்டும் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுகிறது. எனவே கல்வராயன் மலையில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபடுவதை போல வீடு வீடாக சென்று சோதனை செய்து அனுமதி இன்றி நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள்மீது நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.


Next Story