நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுவன் உள்பட 3 பேர் படுகாயம்


நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுவன் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 May 2021 10:56 PM IST (Updated: 30 May 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுவன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. வனப்பகுதிகளின் அருகில் விளைநிலங்கள் உள்ளதால் காட்டுயானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது. 

குறிப்பாக காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த விவசாயிகள் ‘அவுட்டுகாய்’ என்ற நாட்டு வெடிகுண்டை பயன்படுத்துகின்றனர். 

இந்த நிலையில் குன்னூரில் உள்ள சித்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கண்ணன்(வயது 31), அபு(28) ஆகியோர் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டு இருந்தனர். இதை பக்கத்து வீட்டை சேர்ந்த ஸ்ரீராம்(10) என்ற சிறுவன் பார்த்துக்கொண்டு இருந்தான். அப்போது திடீரென நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் கண்ணன், அபு, ஸ்ரீராம் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, அவர்களை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் வெடி விபத்து நடந்த வீட்டில் குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஸ்டேன்லி பார்க் பகுதியில் கடந்த 28-ந் தேதி தேயிலை தோட்டத்தில் காட்டுப்பன்றிக்கு வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து நாய் உயிரிழந்தது. தற்போது சித்தி விநாயகர் கோவில் தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story